search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கச்சா எண்ணெய்
    X
    கச்சா எண்ணெய்

    ரஷியாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு

    பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதிய மத்திய அரசு கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து வாங்க முடிவு செய்து உள்ளது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி உள்ளது.

    அவ்வப்போது உயர்ந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 3 மாதங்களாக உயர்த்தப்படாமல் அப்படியே உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை உயர்வால் மீண்டும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கருதிய மத்திய அரசு கச்சா எண்ணெயை ரஷியாவிடம் இருந்து வாங்க முடிவு செய்து உள்ளது.

    முதல் கட்டமாக 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே விரைவில் கையெழுத்தாக உள்ளது. ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை சந்தை மதிப்பை விட பீப்பாய்க்கு 20 முதல் 25 டாலர் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கச்சா எண்ணெய் விலை கடந்த 3 வாரங்களுக்கு பின்னர் 100 டாலருக்கு கீழ் குறைந்துள்ளது. சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரித்து உள்ளதால் பல மாகாணங்களில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்தும் முற்றிலும் முடங்கி உள்ளது. இதனால் அங்கு கச்சா எண்ணெய் தேவை குறைய வாய்ப்பு உள்ளது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் கட்டுபடுத்தாது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

    இந்த திட்டத்திற்கு இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி. அமிதரா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளதாக கருத தோன்றும் என அவர் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×