search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    ஜம்மு-காஷ்மீரை பிரித்தது மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதி- மக்களவையில் திருமாவளவன் பேச்சு

    ஜம்மு காஷ்மீரை பிரித்தது, பாகிஸ்தானோடு இணையாமல் நிபந்தனைகளின் அடிப்படையில் நம்மோடு இணைந்த அம்மக்களுக்குச் செய்த நம்பிக்கைத் துரோகம் என திருமாவளவன் பேசினார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற  பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவையில் ஜம்மு-காஷ்மீருக்கான பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.  விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் பங்கேற்றார். 

    அப்போது பேசிய திருமாவளவன், ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மாபெரும் தவறாகும். ஜம்மு-காஷ்மீரில் இன்னும் ராணுவ ஆட்சியே நீடிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

    “ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்னும் கனவுத் திட்டத்தை நிறைவேற்றவே ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்துச் சிதறடித்தது இந்த அரசு. இது இமாலயத் தவறு. அம்மக்களுக்கு இழைத்த மாபெரும் அநீதி. பாகிஸ்தானோடு இணையாமல் நிபந்தனைகளின் அடிப்படையில் நம்மோடு இணைந்த அம்மக்களுக்குச் செய்த  நம்பிக்கைத் துரோகம். அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான சனநாயகப் படுகொலை. 

    இன்னும் அங்கே இயல்புநிலை திரும்பவில்லை. ஆனால் அப்படியொரு தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பதைக் கைவிட வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய  நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அமைத்து அப்பகுதியைப் பார்வையிட அனுப்ப வேண்டும். அத்துடன் அம்மக்களின் கருத்தறிய பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். அவர்களின் விருப்பப் படி அரசு முடிவெடுக்க வேண்டும். மீண்டும் அதனைத் தனித்தன்மையுடன் கூடிய மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்றார்  திருமாவளவன்.
    Next Story
    ×