search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: 221 இடங்களில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்து கணிப்பில் தகவல்

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா 325 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 403 தொகுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் வாக்காளர்களின் மனநிலையை அறிவதற்காக ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் அமைப்பு சார்பில் நவம்பர் முதல் வாரத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 41.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 22.2 சதவீத வாக்குகள் கிடைத்தது.

    தற்போது நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி பா.ஜனதாவுக்கு சாதகமான சூழலே நிலவுகிறது. அந்த கட்சி 213 முதல் 221 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    2017-ம் ஆண்டு முதல் மிகச்சிறிய அளவிலான 0.7 சதவீத வாக்காளர்கள் இடையே மட்டும் பா.ஜனதா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

    அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சரிவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 16 முதல் 20 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சரிவு சமாஜ்வாடி கட்சிக்கு சற்று சாதகமாக அமையும்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் தீவிர பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

    காங்கிரஸ் 6 முதல் 10 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 2.6 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா 325 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 48 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×