என் மலர்
செய்திகள்

பிரதமர் மோடி
6 மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி, பாஜக சார்பில் ஆண்டுதோறும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி திட்டத்திற்கான நிதியை பிரதமர் ஒப்படைக்க உள்ளார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்.-கிசான்) திட்டத்தின்கீழ், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை,பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒப்படைக்கிறார். மேலும் இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடுகிறார்.

அப்போது பி.எம்.கிசான் திட்டம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்பான தங்கள் அனுபவங்களை விவசாயிகள் பகிர்ந்துகொள்கின்றனர்.
மாநிலங்களில் நடக்கும் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாஜக முக்கிய தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்துகொள்கின்றனர். சென்னை அருகே மறைமலைநகரில் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் நேற்று சென்னை வந்து சேர்ந்தார். அவரை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். கடந்த வாரம் இதேபோன்று நிதியுதவி திட்டத்தை துவக்கி வைத்து, குஜராத், மத்திய பிரதேச விவசாயிகளுடன் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.
Next Story