search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பிரதமர் மற்றும் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைப்பு

    பிரதமர் மோடி மற்றும் எம்பிக்களின் சம்பளம் 30 சதவீதம் வீதம் ஓராண்டுக்கு குறைக்கப்படுகிறது. இதற்கான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் பொருளாதார நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு பிறகு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா எதிரொலியாக பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதேபோல் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களின் சம்பளமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் சமூகப் பொறுப்பாக சம்பள குறைப்புக்கு முன்வந்துள்ளனர். இந்த பணம் இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு செல்லும். சம்பள குறைப்பு நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஓராண்டுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும்.
    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
    இதேபோல் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது. சம்பள குறைப்பு மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் ஆகிய நடவடிக்கைகளால் 7900 கோடி ரூபாய் சேமிக்கப்படும். இதுதொடர்பான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஊரடங்கு உத்தரவை திரும்ப பெறுவது தொடர்பாக சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு நிமிடமும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×