search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனந்த்குமார் ஹெக்டே
    X
    அனந்த்குமார் ஹெக்டே

    காந்தியின் சுதந்திர போராட்டம் நாடகம்- பா.ஜனதா எம்.பி. சர்ச்சை பேச்சு

    மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று பா.ஜனதா எம்.பி. அனந்த்குமார் ஹெக்டேவின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி பா.ஜனதா எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே. முன்னாள் மந்திரியான இவர் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வருகிறார்.

    இந்தநிலையில் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சை அளிக்கும் வகையில் பேசியுள்ளார். பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இதுதொடர்பாக பேசியதாவது:-

    காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் ஒரு நாடகம். அத்தகையவர்கள் நாட்டில் மகாத்மா என்று அழைக்கப்படுவார்கள்.

    ஒட்டுமொத்த சுதந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது. இந்த தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் எவரும் ஒருமுறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை.

    அவர்களின் சுதந்திர இயக்கம் ஒரு பெரிய நாடகம். அது நேர்மையான போராட்டமே இல்லை. சுதந்திரம் பெற ஒரு ஒப்புதலுக்கான போராட்டம் மட்டுமே.

    காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்தியாகிரகம் ஆகியனவும் நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்தியாகிரக போராட்டத்தால் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்கிரசை ஆதரிப்போர் கூறி வருகிறார்கள். அது உண்மையல்ல.

    சத்தியாகிரகம் காரணமாக ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. விரக்தி அடைந்துதான் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர். வரலாற்றை படிக்கும்போது எனது ரத்தம் கொதிக்கிறது. அத்தகையவர் நமது நாட்டில் மகாத்மா ஆகிவிட்டார்.

    இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.

    அவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    பிரதமர் மோடியிடம் இருந்து இதற்கான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×