என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது ஏன்? - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
புதுடெல்லி:
தமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தொகுதி வரையறை தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசால் திட்டமிட்டபடி நடத்த இயலாமல் போனது.
இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஜெய்சுக்கின் என்பவர் இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், “தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கியுள்ளன. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதம் செய்யப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு தமிழக அரசு வக்கீல் பதில் கூறுகையில், “மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டன. இதனால் தாமதம் ஏற்பட்டு விட்டது. எனவேதான் திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலவில்லை” என்று கூறினார்.
அதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏற்கவில்லை. நீதிபதிகள் கூறுகையில், “ தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து தாமதம் செய்யக் கூடாது. உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றி 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது. வாக்காளர் இறுதி பட்டியலை தந்து விட்டால் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் பணிகளை தொடங்கி விடுவோம் என்று கூறியுள்ளது.
மேலும் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை கவனிக்க 49 நாட்கள் அவகாசம் அளித்தாலே போதும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களின் பதவி காலம் முடிவுக்கு வந்துள்ளது. அதை மேலும் 6 மாதங்களுக்கு கால நீடிப்பு செய்து தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
இதனால் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடை பெறும் என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எழுந்துள்ளது.






