search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    272 இடங்கள் கிடைக்காவிட்டால் ராகுல், ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டார் - காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
    X

    272 இடங்கள் கிடைக்காவிட்டால் ராகுல், ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டார் - காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

    காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் வேண்டும்

    2014-ம் ஆண்டு 282 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு 200 இடங்களுக்குள்தான் வெற்றி கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    அதுபோல கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை சுமார் 100 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சில கட்சிகள் ஆதரவுடன் மன்மோகன்சிங் பிரதமராகி ஆட்சி நடத்தினார்.

    அப்படி பிரதமர் ஆக ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 272 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், ராகுல் காங்கிரஸ் சார்பில் எந்த முயற்சியையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

    நேரு, இந்திரா, ராஜீவ் போன்று பெரும்பான்மை பலத்துடன் மட்டுமே ஆட்சியில் அமர ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.


    அதே சமயத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ராகுல் ஈடுபடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதற்காக மாநில கட்சித் தலைவர்கள் யாராவது ஒருவர் ஒருமித்த முடிவுடன் பிரதமராக முன் வந்தால் அவரை ராகுல் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் நிறைய எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையிலும் 32 எம்.எல்ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமியை முதல்-மந்திரியாக ஏற்றுக் கொண்டது போல 30 எம்.பி.க்களே வைத்திருந்தாலும் மாநில கட்சித் தலைவரை பிரதமராக ஏற்க ராகுல் தயாராகி வருகிறார்.

    272 இடங்களில் வெற்றி கிடைக்காது என்பதை ராகுல் உணர்ந்து இருப்பதால் 3-வது அணி அமைக்கும் முயற்சியை சிலர் மேற்கொண்டிருப்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதோடு பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் ராகுல் ஓசையின்றி ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அவர் ஏ.கே. அந்தோணி, அசோக் கெலாட், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், நவீன்பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடன் இப்போதே தொடர்பை ஏற்படுத்தி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×