என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவி பாட் ஒப்புகை சீட்டால் தேர்தல் முடிவு 4 மணிக்கு பிறகே தெரியவரும் - தேர்தல் அதிகாரி
    X

    விவி பாட் ஒப்புகை சீட்டால் தேர்தல் முடிவு 4 மணிக்கு பிறகே தெரியவரும் - தேர்தல் அதிகாரி

    விவி பாட் ஒப்புகை சீட்டால் பாராளுமன்ற தேர்தல் முடிவு மாலை 4 மணிக்கு பிறகே தெரியவரும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #Loksabhaelections2019

    புதுடெல்லி:

    இந்தியாவில் தேர்தல்களில் ஆரம்பத்தில் ஓட்டு சீட்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதன்பிறகு எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    முதன் முதலில் கேரள மாநிலம் வடக்கு பரவூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் 1982-ம் ஆண்டு ஓட்டு எந்திரம் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டது.

    பின்னர் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் சில தொகுதிகளில் மட்டும் ஓட்டு எந்திரத்தை பயன் படுத்தினார்கள்.

    1999-ல் கோவா மாநில சட்டசபை தேர்தலில் முழுமையாக ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004 பாராளுமன்ற தேர்தலில் இருந்து இந்தியா முழுவதும் ஓட்டு எந்திரம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால், ஓட்டு எந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தும் போது, யாருக்கு ஓட்டு பதிவாகிறது என்பதை நமக்கு காட்டாது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாக புகார் கூறப்பட்டது.

    இதனால் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை நமக்கு காட்டும் வகையில் விவிபாட் (ஒப்புகை சீட்டு) என்ற எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதில், ஓட்டு எந்திரத்தில் பொத்தானை அழுத்தியதும் அங்குள்ள சிறிய மானிட்டரில் நாம் ஓட்டு போடும் நபரின் படம், சின்னம் ஆகியவை தெரியும். அதில் இருந்து ஒப்புகை சீட்டு ஒன்றும் அதற்குள் உள்ள பெட்டியில் விழும்.


    இந்த எந்திரம் ஏற்கனவே பரிட்சார்த்த முறையில் பல தேர்தல்களில் பயன் படுத்தப்பட்டது. இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே, பழைய மாதிரி ஓட்டு சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும் என்றும் பல எதிர்க்கட்சிகள் தேர்தல் கமி‌ஷனிடம் கோரிக்கை வைத்தன.

    ஆனால், அதை தேர்தல் கமி‌ஷன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா ஒரு விவிபாட் எந்திரத்தில் ஒப்புகை சீட்டை எண்ணி, ஓட்டு எந்திரத்தின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதில், 50 சதவீத வி.வி. பாட் எந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதற்கு பதிலாக பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 விவிபாட் எந்திரங்களின் ஒப்புகை சீட்டை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதன்படி இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வருகிற 23-ந்தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

    வழக்கமாக எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும். அடுத்த 2 அல்லது 3 மணி நேரத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்து விடும்.

    ஆனால், இப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக 5 எந்திரங்களில் ஒப்புகை சீட்டை எண்ண வேண்டி இருப்பதால் மிகவும் காலதாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரி மஞ்சுநாதபிரசாத் கூறியதாவது:-

    விவிபாட் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டி இருப்பதால் தேர்தல் முடிவு மிகவும் காலதாமதம் ஆகும். காலை 8 மணிக்கு எண்ணிக்கை தொடங்கினாலும் மாலை 4 மணிக்கு பிறகு தான் தேர்தல் முடிவு தெரிய வரும்.

    ஓட்டு எந்திரத்தில் உள்ள எண்ணிக்கையும், ஒப்புகை சீட்டில் உள்ள எண்ணிக்கையும் வேறுபட்டால் முடிவை அறிவிப்பதில் மேலும் சிக்கல்கள் ஏற்படும். ஓட்டு எண்ணிக்கையை ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவி, மைக்ரோ மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 5 விவிபாட் எந்திரங்களை எண்ண வேண்டி இருப்பதால் நாடு முழுவதும் 20 ஆயிரத்து 655 எந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால் காலையிலேயே தேர்தல் முடிவை அறிய முடியாது என்று தெரிய வந்துள்ளது. #Loksabhaelections2019

    Next Story
    ×