search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய பாலியல் புகார் பற்றி முழு விசாரணை
    X

    தலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய பாலியல் புகார் பற்றி முழு விசாரணை

    தலைமை நீதிபதி மீது பெண் உதவியாளர் கூறிய பாலியல் புகாரின் பின்னணியில் உள்ள மூல காரணத்தை கண்டறிய முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறி உள்ளனர். #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 64) மீது அவரிடம் உதவியாளராக பணியாற்றிய 35 வயது பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கடந்த சனிக்கிழமையன்று தாமாக முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதில் பெரிய அளவில் சதி இருப்பதாக கருத்து தெரிவித்தது.

    இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் அவர், “தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் அதிர்ச்சியைத் தருகிறது. புகார் கூறியவர் தரப்பில் நான் ஆஜராக விரும்பினேன். ஆனால் வழக்கு தொடர்பாக அஜய் என்பவர் என்னிடம் வந்து தெரிவித்த தகவல்கள் நம்பும்படியாக இல்லை. உடனே புகார் கூறியவரை (பெண்ணை) சந்திக்க வேண்டும் என நான் கூறினேன். ஆனால் அதற்கு அஜய் சம்மதிக்கவில்லை. இதனால் தலைமை நீதிபதி மீது வழக்கு போட ரூ.1½ கோடி அளவுக்கு லஞ்சம் தர முன்வந்தார். உடனே நான் அவரை வெளியே அனுப்பிவிட்டேன். தலைமை நீதிபதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. இது குறித்து விசாரிக்க வேண்டும்” என அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருந்தது.



    இதை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை (நேற்று) கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வக்கீல் உத்சவ் சிங் பெயின்சுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    அதன்படி நேற்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது வக்கீல் உத்சவ் பெயின்ஸ் நேரில் ஆஜரானார். அப்போது அவர், ‘சீல்‘ வைத்த உறை ஒன்றில் சில ஆவணங்கள் மற்றும் ஒரு கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் (சி.சி.டி.வி. பதிவு) தான் தாக்கல் செய்வதாகவும் அவை பல விஷயங்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்த தடயங்களாகும் என்றும் கூறினார். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் சதியில் தொடர்புடைய ஒரு கார்ப்பரேட் நிறுவனம் குறித்த தடயம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் சி.பி.ஐ. இயக்குனர், தேசிய உளவு முகமை இயக்குனர் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் தங்கள் (நீதிபதிகள்) அறையில் (நேற்று) 12.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி அவர்கள் ஆஜரானார்கள்.

    பின்னர் பிற்பகல் 3 மணிக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தலைமை நீதிபதி மீது கூறப்பட்ட புகார் அவருக்கு எதிரான சதியின் பின்னணியா? என்பதை கண்டறியவேண்டும் என்றும், அந்த சதியின் மூல காரணத்தை கண்டுபிடிக்க முழுஅளவில் விசாரணை நடத்தப்படும் என்றும், இப்படிப்பட்ட புகார்கள் தொடர்ந்தால் அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறினார்கள்.

    விசாரணையில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பங்கேற்றார். அவர் வாதாடுகையில், “வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் தன்னுடைய முகநூலில் அதிருப்தியுற்ற சில நீதிபதிகளும் இந்த சதியில் பங்கேற்று உள்ளனர் என்று எழுதி இருக்கிறார். ஆனால் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அது குறித்து ஏதும் இல்லை. இது முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது” என்று கூறினார்.

    அதற்கு வக்கீல் உத்சவ் பெயின்ஸ், தன் மீது மிகவும் மோசமான குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக வருத்தம் தெரிவித்ததோடு, அட்டார்னி ஜெனரல் தனது நோக்கத்தை சந்தேகப்படுவதாகவும் கூறினார்.

    உடனே நீதிபதி ரோகின்டன் பாலி நாரிமன், அட்டார்னி ஜெனரல் மிகவும் மரியாதைக்கு உரியவர் என்றும் அவர் மீது சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு ஏதும் உரிமையில்லை என்றும் அப்படி சந்தேகப்படுவதாக நீங்கள் கூறினால் உங்களை வெளியேற்ற வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    அதற்கு உத்சவ் சிங் பெயின்ஸ், “என்னை வெளியேற்ற தேவையில்லை. நானே நடந்து வெளியில் செல்வேன்” என்று கூறினார்,.

    அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா குறுக்கிட்டு, நீங்கள் இளைஞராக இருக்கிறீர்கள். “இதுபோன்று நேரடியாக அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். நீதிபதி தன்னுடைய வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:-

    தற்போது உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், அதிருப்தியுற்ற சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் சிலர் தலைமை நீதிபதிக்கு எதிராக சதி திட்டம் தீட்டி இருப்பதாக கூறி இருக்கிறார். தலைமை நீதிபதி, ஏற்கனவே ஒரு வழக்கில் உத்தரவை தவறாக பதிவு செய்த சில ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார். அவர்களை பதவி நீக்கம் செய்து இருக்கிறார்.

    எனவே, உத்சவ் சிங் பெயின்ஸ் தன்னுடைய பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட் ஊழியர்கள் பற்றி மற்றொரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் உத்சவ் சிங் பெயின்ஸ் மற்றும் அந்த ஊழியர்களுக்கு இடையே நடைபெற்ற தகவல் தொடர்பில் ஏதேனும் உரிமை மீறல் உள்ளதா என்பதையும் கோர்ட்டு தீர்மானிக்கும்.

    ஒரு பொய்யான பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்வதன் விளைவுகள் பற்றி உத்சவ் சிங் பெயின்ஸ் கண்டிப்பாக அறிந்து இருப்பார். அவர் இந்த சதி பற்றி கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை நாளை (இன்று) காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு டெல்லி போலீசார் கோர்ட் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    வழக்கு நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து உள் அமர்வு விசாரணை நடத்த நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது.

    இந்த குழுவை நியமனம் செய்ததற்கு எதிராக 259 பெண் வக்கீல்கள், அறிஞர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், நேர்மையான தனி நபர்களை கொண்டு ஒரு சிறப்பு குழு அமைத்து அந்த குழு 90 நாட்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதுவரை தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டில் எந்த அலுவலக பணியும் மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி உள்ளனர்.   #CJIRanjanGogoi #AllegationsAgainstCJI 
    Next Story
    ×