search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்
    X

    இரட்டை இலை சின்னம் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்

    எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் சசிகலா சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala
    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

    இந்தநிலையில் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் வி.கே.சசிகலா தரப்பில் நேற்று அவருடைய வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.



    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி தேர்தல் கமிஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தபோது, பெரும்பான்மை என்னிடம் (சசிகலாவிடம்) இருந்தது. ஆனால் தேர்தல் கமிஷன் பெரும்பான்மையை கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்கியது. முற்றிலும் பாரபட்சமாக நடந்து கொண்டது.

    இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியின் விதிமுறைகளை சட்டவிரோதமாக மாற்றினார்கள். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என 2 பதவிகளை உருவாக்கினார்கள். தேர்தல் கமிஷன் இதனையும் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொண்டது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தேர்தல் கமிஷனில் போலி ஆவணங்களை தாக்கல் செய்தனர். இதுகுறித்த எங்கள் புகார்களை தேர்தல் கமிஷன் கருத்தில் கொள்ளவில்லை. டெல்லி ஐகோர்ட்டும் மேற்கண்ட அம்சங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது.

    கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தையும் தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை.

    எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  #SupremeCourt #DoubleLeafSymbol #Sasikala 
    Next Story
    ×