search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    40 தொகுதிகளில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: குஷ்பு பேட்டி
    X

    40 தொகுதிகளில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: குஷ்பு பேட்டி

    40 தொகுதிகளிலும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரிஸ்வான் ஹர்‌ஷத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா என்று பார்க்காமல் தீய சக்தி, நல்ல சக்தி என்று தேர்தலை பார்க்க வேண்டும். பா.ஜனதா என்றாலே தீய சக்தி தான்.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கியாஸ் சிலிண்டரின் விலை என்ன?. மோடியின் ஆட்சியில் அதன் விலை என்ன என்பதை நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பொதுவாக தாய்மார்கள் கணவர்களுக்கு தெரியாமல் சமையல் அறையில் பணத்தை மறைத்து வைப்பார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு ஒரே இரவில் பணம் அனைத்தும் செல்லாது என கூறி அனைத்து பணத்தையும் குப்பையாக மாற்றினார்.

    பின்னர் பணத்துக்காக மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்து நின்றனர். அவ்வாறு வரிசையில் காத்து நின்றபோது 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

    பா.ஜனதா என்றால் மோடி மட்டுமே. ஆனால் காங்கிரஸ் என்பது ஒரு கூட்டம். மோடி தமிழ்நாடு என்றாலே வெறுக்கிறார். தமிழ் நாட்டில் புயல் பாதிப்பின் போது மோடிக்கு தமிழ்நாடு மீது அக்கறை வரவில்லை. தற்போது தேர்தல் வருவதால் மோடி தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நடித்து வருகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். இதுவரை ஒருவர் வங்கி கணக்கிலும் ஒரு பைசா கூட செலுத்தவில்லை. அதனால் பொய் கூறிவரும் மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்.

    ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்தபோது எங்கே இருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோ‌ஷம் எழுப்புவதால் தமிழக மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்களா?

    கேரளாவிற்கு சென்று ஐயப்பா என்று கூறுவதாலும் பா.ஜனதாவுக்கு வாக்குகள் கிடைத்து விடாது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடிப்பை தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் நம்பப் போவதில்லை.

    தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட்டு உள்ள 5 தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைவான வாக்கே கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை, தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்ற ரீதியில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சமீபத்தில் கூறி இருந்தார்.

    அ.தி.மு.க.வில் விஞ்ஞானிகள் அதிகம். ஏரி நீர் ஆவியாக மாறுவதை தடுப்பதற்கு தெர்மாகோல் தடுப்பு அமைக்க நடந்த முயற்சி அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளதால் தமிழிசைக்கும் அதன் பாதிப்பு வந்துவிட்டது.

    எந்த காலத்திலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றாது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் பதவியேற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    Next Story
    ×