search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி?- அமலாக்கத்துறைக்கு கோர்ட் நோட்டீஸ்
    X

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி?- அமலாக்கத்துறைக்கு கோர்ட் நோட்டீஸ்

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    புதுடெல்லி:

    ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணைக்குப் பிறகு கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான 12 ஒப்பந்தங்களில் தலையிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


    ஆனால் இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஊடகங்களுக்கு அதன் நகல் கசிந்துவிட்டதாக கூறி கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது யாருடைய பெயரையும் தான் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு  செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
     
    இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  11-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.

    மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    Next Story
    ×