search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர் டாம் வடக்கண் பாஜகவில் இணைந்தார்
    X

    சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளர் டாம் வடக்கண் பாஜகவில் இணைந்தார்

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் பாஜகவில் இன்று இணைந்துள்ளார். #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண்  இன்று காலை  மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத்தின் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.



    இது குறித்து டாம் வடக்கண் கூறியிருப்பதாவது:

    புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரசின் கருத்து நாட்டு நலனுக்கு எதிரானது. இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானேன். கட்சிக்காக நான் 20 ஆண்டுகளாக என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆனால், இப்போது என்னை தூக்கி எறிகிறார்கள். பரம்பரை அரசியல் காங்கிரஸில் உச்சத்தினை பெற்றுள்ளது.  இதன் காரணமாகவே நான் பாஜகவில் இணைந்துள்ளேன். நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என பிரதமர் மோடியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் செய்தித் தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த டாம் வடக்கண் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் விலகியது கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    பாஜகவில் இணைந்த டாம் வடக்கண்ணிற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், கேரளாவில் சீட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #CongressSpokesperson #TomvadakkanJoinsBJP
    Next Story
    ×