search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை: ஈசுவரப்பா
    X

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை: ஈசுவரப்பா

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை என்று கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து சட்டசபையில் பிரச்சினை கிளப்பி பேசினோம். வறட்சி பாதித்த பகுதிகளில் மந்திரிகள் ஆய்வு நடத்தவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், சித்தராமையா ஆகியோர் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனாலும் அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவில்லை.

    நாங்கள் 2-வது முறையாக வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் பணிகளை தொடங்கியுள்ளோம். இப்போது தான் மாநில அரசு கண்ணை திறந்துள்ளது. இப்போதாவது மாவட்ட பொறுப்பு மந்திரிகள் வறட்சி ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அரசு சொல்கிறது. ஆனால் இதுவரை அந்த கடன் தள்ளுபடி செய்யவில்லை. அதன் மூலம் விவசாயிகளுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மத்திய குழு கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்துள்ளது.



    மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல், மாநில அரசு தனது சொந்த நிதியில் வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே அதிருப்தி உள்ளது. மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் காகித புலிகளை போன்றவர்கள்.

    காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை இழுக்க நாங்கள் முயற்சி செய்யவே இல்லை. அத்தகைய எண்ணமும் எங்களுக்கு இல்லை. ஆனால் பா.ஜனதா மீது காங்கிரசார் புழுதி வாரி இறைக்கிறார்கள். சட்டசபையில் எங்களுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பூத் மட்டத்தில் எங்கள் கட்சி பலமாக உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களின் கூட்டணியால், எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். 20-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    Next Story
    ×