என் மலர்
செய்திகள்

சசிகலா மீது அவதூறாக புகார் கூறிய அதிகாரி ரூபா மீது மானநஷ்ட வழக்கு- புகழேந்தி பேட்டி
பெங்களூரு:
கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கூறியதாவது:-
போலீஸ் அதிகாரி ரூபா தனது கடமையை செய்யாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதையே தொழிலாக கொண்டுள்ளார். அவருக்கு பெயரும், புகழும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்கட்டும். நாங்களும் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துகிறோம்.
ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் சிறைத்துறை பொறுப்பில் இருந்தபோது 2 மெமோக்களை ரூபாவுக்கு வழங்கினார்.
அந்த மெமோக்களுக்கு பதிலளிக்காத அவர் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து அவரது பிரச்சினையை திசைதிருப்பி விட்டார். சிறையில் எந்த வசதியும் இல்லாமல் சசிகலா, அவதிப்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கு சலுகை செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ரூபா கூறி இருக்கிறார். நான் இதுவரை 1 கோடி பணத்தைகூட நேரில் பார்த்தது இல்லை.

இந்த விவகாரத்தில் என்னையும் தேவையில்லாமல் இழுத்து கர்நாடக ஊழல் தடுப்புபடை போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். ரூபா மீது நானே மானநஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். சசிகலா தரப்பிலும் அவர் மீது வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #pugalenthi #sasikal #roopa






