search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே கட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை: முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே
    X

    ஒரே கட்சியில் இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை: முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே

    ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே கூறியுள்ளார். #EknathKhadse #BJP
    மும்பை :

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏக்நாத் கட்சே. வருவாய் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மந்திரி சபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். இவர் மீது நில முறைகேடு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்காரணமாக அவர் தனது மந்திரி பதவியை இழக்க நேர்ந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் புசாவால் நகர் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சேயும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உல்லாஸ் பாட்டீலும் கலந்துகொண்டனர்.

    அப்போது நிகழ்ச்சியில் பேசிய உல்லாஸ் பாட்டீல், பா.ஜனதா கட்சி ஏக்நாத் கட்சேவுக்கு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் காங்கிரசில் இணைய அவருக்கு அழைப்பு விடுத்தார்.

    இதற்கு முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே பதில் அளிக்கும் வகையில் பேசுகையில், “நீங்கள் (உல்லாஸ் பாட்டீல்) நினைப்பதை நான் கண்டிப்பாக யோசிக்கவில்லை. உங்கள் கட்சியானாலும், எனது கட்சியானாலும், யாரும் ஒரே கட்சியில் இருக்கப்போவதில்லை. ஒரே கட்சியில் நிலைத்து இருக்கும் விசுவாசிகளுக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைப்பதில்லை.

    அநீதி இழைக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள வேண்டும். அநீதி இழைத்தவர்கள் சரியான நேரத்தில் பாதிக்கப்பட்ட நபரின் வலிமையை புரிந்துகொள்வார்கள்” என்றார்.

    இதன்மூலம் பா.ஜனதா மூத்த தலைவரான ஏக்நாத் கட்சே கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கட்சியை விட்டு விலக உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

    இந்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று அவர் அளித்த பதிலில், “ நான் பா.ஜனதாவில் இருந்து விலகப்போவதில்லை. மேலும் கட்சி மீது அதிருப்தியிலும் இல்லை. எனக்கு ஏதேனும் வருத்தம் ஏற்படுமாயின் நான் கட்சி தலைவரிடம் இதுகுறித்து பேசி முடிவெடுப்பேன்” என்றார். #EknathKhadse #BJP
    Next Story
    ×