search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தல் - பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

    பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக பா.ஜனதா எம்.பி.க்களை மாநில வாரியாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. #ParliamentElection #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

    இதனால் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி உள்ளன.

    சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களை பா.ஜனதா இழந்தது. மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், பா.ஜனதாவுக்கு இது பின்னடைவாகவே கருதப்படுகிறது.



    இதையடுத்து பா.ஜனதா மூத்த தலைவர்கள் கட்சியை மீண்டும் பலப்படுத்தி புத்துணர்ச்சி கொடுப்பதற்காக அடுத்தடுத்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும் பா.ஜனதா எம்.பி.க்களை சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    பா.ஜனதா எம்.பி.க்களை மாநில வாரியாக சந்தித்து பேச மோடி திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் 30 முதல் 40 எம்.பி.க்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச எம்.பி.க்கள் இருப்பதால் அவர்களை 3 கட்டங்களாக சந்திக்க பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய உத்தரபிரதேசம், மேற்கு உத்தரபிரதேசம் எம்.பி.க்கள் என 3 கட்டமாக இந்த சந்திப்பு நடக்கிறது.

    எம்.பி.க்களுடனான மோடியின் சந்திப்பு மத்திய மந்திரிகளில் யாராவது ஒருவர் வீட்டில் நடக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில எம்.பி.க்களை மோடி 28-ந்தேதி சந்திக்க உள்ளார்.

    டெல்லி, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், காஷ்மீர், அரியானா மாநிலங்களின் எம்.பி.க்களை நாளை மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது தேர்தல் பிரசாரத்தை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி பிரதமர் மோடி ஆலோசனை வழங்க உள்ளார்.

    ஒவ்வொரு எம்.பி.யும் புதிய திட்டங்களுடன் வருமாறும் பிரதமர் நரேந்திர மோடியிடம் சகஜமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #ParliamentElection #PMModi
    Next Story
    ×