search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிப்பு - வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்
    X

    பீகாரில் 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிப்பு - வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றம்

    பீகார் மாநிலம், முசாபர்பூரில் தொடங்கி 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCtransfers #Biharshelterhome
    புதுடெல்லி:

    பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சுமார் 30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இவ்விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காப்பகத்தின் பொறுப்பாளர் பிரஜேஷ் தாக்கூர் உள்பட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சிறுமிகள் சீரழிக்கப்பட்ட பாதுகாப்பு இல்லத்திற்கு பீகார் மாநில சமூக நலத்துறை மந்திரி மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா அடிக்கடி சென்று வந்ததாகவும், அதனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்திரசேகர்  வர்மாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் மஞ்சு வர்மா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

    இதைதொடர்ந்து, தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவின் வீட்டை போலீசார் சோதனையிட்டபோது அனுமதி பெறாத கள்ளத்துப்பாக்கிகள் மஞ்சு சர்மா வீட்டில் கிடைத்தன. இதன் அடிப்படையில் கணவன் - மனைவி இருவருக்கும் எதிராக ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் தனியாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை அறிக்கையை டிசம்பர் 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சமர்பிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போலீசார் கையில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மா இரு மாதங்களுக்கு முன்னர் பேகுசராய் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.



    அவரை தொடர்ந்து போலீசார் கண்ணில் சிக்காமல் இருந்த மஞ்சு வர்மா பேகுசராய் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹவுல் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி ஆஜரானார். அவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தில் முசாபர்பூரில் தொடங்கி அங்குள்ள 16 அரசு காப்பகங்களில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரம் வெளிச்சத்துக்குவர காரணமாக இருந்த தனியார் நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில் பீகாரில் உள்ள 17 காப்பகங்களில் சிறுமிகள் சீரழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் பி லோக்குர் தலைமையிலான அமர்வு இந்த வழக்கின் விசாரணையை பீகார் மாநில காவல்துறை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. #SCtransfers #Biharshelterhome #shelterhomeabuse #MuzaffarpurShelterHome 
    Next Story
    ×