search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 மாநில சட்டசபை தேர்தல் - ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு
    X

    5 மாநில சட்டசபை தேர்தல் - ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #AssemblyElections #Congress #BJP
    புதுடெல்லி:

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 7-ந்தேதிக்குள் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எடுத்து வருகின்றன.

    இந்த வார தொடக்கத்தில் வாக்காளர்களிடம் சி.ஓட்டர் எடுத்த கருத்து கணிப்பின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 150, பா.ஜனதா 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. மொத்த தொகுதிகள் 200.

    230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 116 தொகுதிகளையும், பா.ஜனதா 107 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 64 தொகுதிகளும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 50-க்கும் குறைவான தொகுதிகளுமே கிடைக்கும் எனவும் சி-ஓட்டர் கூறுகிறது. மொத்த தொகுதிகள் 119.

    சத்தீஷ்காரில் பா.ஜனதா 43 தொகுதிகளையும், காங்கிரஸ் 41 இடங்களையும், இதர கட்சிகள் 6 இடங்களையும் கைப்பற்றும் எனத் தெரிய வந்துள்ளது. மொத்த இடங்கள் 90.

    இதேபோல் 40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரமில், மிசோ தேசிய முன்னணிக்கு 17, காங்கிரசுக்கு 12, சோரம் மக்கள் இயக்கத்துக்கு 9 இடங்கள் கிடைக்கும் என சி-ஓட்டர் கூறுகிறது.

    அதேநேரம் சி.என்.எக்ஸ். நிறுவனம் டைம்ஸ் நவ் டி.வி.க்காக எடுத்த கருத்து கணிப்பில் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 115 இடங்களும், பா.ஜனதாவுக்கு 75 தொகுதிகளும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

    இதே நிறுவனம் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா 122 இடங்களையும், காங்கிரஸ் 95 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது.

    சத்தீஷ்காரில் பா.ஜனதாவுக்கு 50 இடங்களும், காங்கிரசுக்கு 30 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என்று சி.என்.எக்ஸ். கருத்து கணிப்பு கூறுகிறது.
    Next Story
    ×