search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஐ அமைப்பில் அதிகார மோதல்: 2 இயக்குனர்கள் பதவி நீக்கம்- உயர் அதிகாரிகள் மாற்றம்
    X

    சிபிஐ அமைப்பில் அதிகார மோதல்: 2 இயக்குனர்கள் பதவி நீக்கம்- உயர் அதிகாரிகள் மாற்றம்

    சிபிஐ அமைப்பில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 இயக்குனர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #CBI #AlokVerma #RakeshAsthana #NageswaraRao
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. என்பது நாட்டின் மிக உயர்ந்த புலனாய்வு விசாரணை அமைப்பாகும். மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இது இயங்குகிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள் கடத்தல், தீவிரவாதம் போன்ற வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மேலும் குறிப்பிடத்தக்க சில வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டும், மாநில ஐகோர்ட்டுகளும் சி.பி.ஐ.க்கு பரிந்துரைப்பது வழக்கம். அந்த அளவுக்கு நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனால் தான் சி.பி.ஐ.க்கு என்று தனி மதிப்பு, மரியாதை இருக்கிறது.

    ஆனால் சமீபகாலமாக சி.பி.ஐ.யில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கியும், ஒருவருக்கொருவர் மோதல்களில் ஈடுபட்டும் அதன் பெருமையை குறைக்கும் வகையில் செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா இருந்து வந்தார். இவருக்கு கீழ் அடுத்த நிலையில் சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர்தான் உச்சகட்ட மோதலாக வெடித்துள்ளது.

    சமீபத்தில் மொயின் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இவர் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான புலனாய்வு குழு விசாரித்து வந்தது. துணை சூப்பிரண்டு தேவேந்தர் குமார் உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா, இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இருவரும் வழக்கில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். இதற்காக தெலுங்கு தேச எம்.பி. ஒருவர் மூலம் சி.பி.ஐ. இயக்குனரையும், சிறப்பு இயக்குனரையும் அணுகினார்கள்.

    இந்த நிலையில் வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக மத்திய மந்திரி சபை செயலாளருக்கு சிறப்பு இயக்குனர் அஸ்தானா புகார் கடிதம் எழுதினார்.

    தொழில் அதிபர் சதீஷ் சனா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த புகார் கூறப்பட்டது.

    இதற்கு பதிலடியாக சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீது ரூ.5 கோடி லஞ்சப் புகார் கூறப்பட்டது. இவர் சதீஷ் சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் என்று சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா உத்தரவின் பேரில் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு இரு உயர் அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார்களை கூறியதால் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.

    இந்த நிலையில்தான் அஸ்தானாவின் விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்த துணை சூப்பிரண்டு தேவேந்தர் குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். லஞ்சப் புகாருக்கு ஆளான இவர்தான் சதீஷ் சனாவிடம் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் தொடர்பாக போலி வாக்குமூலம் பெற்றதாக கூறப்பட்டது.

    முன்னதாக அவரது வீடு- அலுவலகத்தில் சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவரைத் தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் என கருதி சிறப்பு இயக்குனர் அஸ்தானா டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை அஸ்தானாவை கைது செய்ய டெல்லி கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனர்கள் இடையேயான மோதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடி இது தொடர்பாக மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


    இதில் சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் பதவியில் இருந்து விடுவித்து உடனடியாக விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.

    இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை நள்ளிரவில் பிறப்பித்தது. உடனடியாக உத்தரவு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவும் பொறுப்புகளில் இருந்து விலகினார்கள்.

    அலோக் வர்மாவுக்கு பதில் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டார். அவர் நள்ளிரவு 2 மணிக்கு சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார். இவர் இதுவரை இணை இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார்.

    பதவி ஏற்றதும் உடனடியாக அவர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். முந்தைய இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் 10-வது மற்றும் 11-வது தளங்களில் உள்ள இருவரது அலுவலக அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    நடவடிக்கைக்கு ஆளான இரு இயக்குனர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மற்ற அதிகாரிகள் பற்றியும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரித்து வந்த பல்வேறு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் லோக் வர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்த துணை கண்காணிப்பாளர் ஏ.கே.பஸ்சியும் ஒருவர். இவர் போர்ட் பிளேருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் சி.பி.ஐ. தலைமை அலுவலக பாதுகாப்பு பணி மத்திய தொழில் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சி.பி.ஐ. வட்டாரத்தில் மட்டுமல்லாது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிக பொறுப்பேற்றுள்ள நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 1986-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். #CBI #AlokVerma #RakeshAsthana #NageswaraRao #CBIVsCBI 
    Next Story
    ×