search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சூர் ஏ.டி.எம். சென்டரில் பதிவான கொள்ளையர்கள் உருவம்.
    X
    திருச்சூர் ஏ.டி.எம். சென்டரில் பதிவான கொள்ளையர்கள் உருவம்.

    கேரளாவில் ஒரே நாளில் 2 ஏடிஎம் எந்திரங்களை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளை

    கேரளாவில் ஒரே நேரத்தில் 2 ஏ.டி.எம். சென்டர்களில் எந்திரங்களை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளைபோனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் திருச்சூர் கொரட்டி என்ற இடத்தில் உள்ளது சவுத் இந்தியன் வங்கி. இந்த வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். சென்டருக்கு அதிகாலை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பணம் எடுக்க வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வங்கி அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். எந்திரத்தை சோதனை செய்தபோது அதில் இருந்த ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் சத்தம் வராத எந்திரம் மூலம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இங்கு கொள்ளை நடந்த சில மணி நேரத்திற்கு முன்னதாக கொச்சி திருப்பணித்துறையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். சென்டருக்குள் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    இதே நேரத்தில் கோட்டயம் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். உடைக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கொச்சி சிட்டி போலீஸ் கமி‌ஷனர் தினேஷ் திருப்பணித்துறையில் கொள்ளை போன ஏ.டி.எம். சென்டரில் ஆய்வு செய்தார்.

    கொள்ளையர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் நுரைபோன்ற ஸ்பிரே அடித்து மறைத்துள்ளனர். பின்னர் கடப்பாரை, கட்டிங் எந்திரம் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ளனர். ஆனால் கொள்ளையர்கள் உருவம் கேமிராவில் தெளிவாக பதிவாகவில்லை.

    திருச்சூரில் உள்ள ஏ.டி.எம். சென்டர் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் கொள்ளையடித்தது தெளிவாக பதிவாகி உள்ளது. போலீசார் கேமிரா பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோன்று கோட்டயத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டது தெரியவந்தது. அதனை சோதனை செய்தபோது எந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் எதுவும் கொள்ளைபோகவில்லை.

    மாநிலத்தில் ஒரே நேரத்தில் 3 ஏ.டி.எம். சென்டரை உடைத்து ரூ.35 லட்சம் கொள்ளைபோனது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சாலக்குடியில் உள்ள ஒரு பள்ளிகூட மைதானத்தில் அனாதையாக ஒரு கார் நின்றது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தியபோது அது வாடகை கார் என்பது தெரியவந்தது.

    மேலும் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வடமாநில வாலிபர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
    Next Story
    ×