என் மலர்
செய்திகள்
X
உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு சோனியா, ராகுல் இரங்கல்
Byமாலை மலர்10 Oct 2018 9:31 PM IST (Updated: 10 Oct 2018 9:31 PM IST)
உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயில் தடம் புரண்டது.
என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உ.பி.யில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் மாநில அரசு விரைந்து ஈடுபட்டிருக்கும் என நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
Next Story
×
X