search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொச்சியில் கன்னியஸ்திரிக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசும் சமூக ஆர்வலர்
    X
    கொச்சியில் கன்னியஸ்திரிக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசும் சமூக ஆர்வலர்

    பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் படத்தை வெளியிட்ட கிறிஸ்தவ அமைப்பு மீது வழக்கு

    பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கன்னியர் சபை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில கோட்டயத்தை அடுத்த குருவிலாங்காடு கன்னியர் மடத்தில் தங்கியிருந்த கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.

    இப்புகார் குறித்து கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜலந்தர் ஆயர் பிராங்கோ முல்லக்கல், வருகிற 19-ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கோட்டயம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே ஆயர் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய போலீசார் தாமதம் செய்வதாக கூறி கன்னியாஸ்திரியின் ஆதரவாளர்கள், உறவினர்கள் கொச்சியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 8-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இப்போராட்டத்திற்கு பெண் உரிமை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகைகள் ரீமா கல்லிங்கல், பாக்கிய லெட்சுமி ஆகியோரும் போராட்ட களத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆயர் மீது புகார் கூறிய கன்னியாஸ்திரி பற்றி, அவர் பணியாற்றி வந்த கன்னியர் சபை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியது.

    இது தொடர்பாக நேற்று கன்னியர் சபை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கன்னியாஸ்திரி மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டதோடு, கன்னியாஸ்திரியும், ஆயர் பிராங்கோ முல்லக்கல்லும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டது.

    இந்த புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியானது. இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்திய சட்ட விதிகளின் படி, பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்கள், சிறுவர்கள் குறித்த புகைப்படங்கள், விவரங்களை வெளியிடக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளான கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட கன்னியர் சபை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலர் புகார் செய்தனர். அதன் பேரில் கேரள போலீசார் இது தொடர்பாக கன்னியர் சபை மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். #tamilnews
    Next Story
    ×