search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
    X

    ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #RajivGandhimurdercase

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது விடுதலைப் புலிகளின் தற்கொலை படையால் படுகொலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து விடுதலைப் புலிகளையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் தமிழக போலீசார் வேட்டையாடி கைது செய்தனர். அவர்கள் மீது சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    குற்றவாளிகளிடம் விசாரணை முடிந்த நிலையில் 1998-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அப்போது நளினி, முருகன், சாந்தன் உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் மேல்முறையீடு செய்ததால் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    தூக்கு தண்டனையை குறைக்க கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த கருணை மனுவை கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதி நிராகரித்தார்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு காலதாமதமாக முடிவு செய்து கருணை மனு நிராகரித்துப்பட்டு இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க முயற்சி மேற் கொண்டார்.

     


    இதையடுத்து முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ஏற்கனவே தண்டனை குறைக்கப்பட்ட நிலையில் 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

    இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யக் கோரும் வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. எனவே அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    தமிழக அரசு சார்பில் வாதிடும்போது, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், தண்டனை காலத்தை கடந்து சிறையில் இருந்து வருவதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதில் மத்திய அரசு எந்த இறுதி முடிவும் எடுக்காமல் தாமதித்து வந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கோரிக்கை மீது மத்திய அரசு 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் இன்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், வக்கீல் ராகேஷ் ரஞ்சன் ஆகியோர் ஆஜராகி மத்திய அரசின் முடிவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

     


    ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமான குற்றச்செயல் ஆகும். இந்திய ஜனநாயக நடைமுறைப்படி பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது இந்த படுகொலை நடந்துள்ளது.

    குற்றவாளிகள் ஈவுஇரக்கமின்றி இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்தவித கருணையும் காட்ட முடியாது. அதற்கான தகுதி இல்லை.

    அவர்களை விடுதலை செய்வது அபாயகரமானது. மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை என பல மட்டத்தில் ஆலோசனை நடத்தியதில் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    குற்ற நடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின்படி இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.

    இவ்வாறு மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 7 பேரையும் மத்திய அரசு விடுவிக்க மறுத்து விட்டது உறுதியாகி உள்ளது.

    இந்த அறிக்கையுடன் 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தற்கான ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் முடிவை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது. அப்போது தமிழக அரசு வக்கீல் எழுந்து, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×