search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
    X

    மும்பையில் கனமழை: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

    மும்பையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழைக்கு 4 பேர் பலியானார்கள். நிலச்சரிவில் 15 வாகனங்கள் மண்ணில் புதைந்தன. #Mumbairain
    மும்பை:

    மராட்டியத்தில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு மேலும் தீவிரம் அடைந்தது. இரவு முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. விடிய, விடிய பேய் மழை கொட்டி தீர்த்தது.

    அதன்பின்னரும் மழையின் வேகம் குறையவில்லை. நேற்று காலையிலும் பலத்த மழை பெய்து கொண்டே இருந்தது. மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் நாள் முழுவதும் மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.



    இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கொட்டி தீர்த்த கன மழையால் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    தண்டவாளங்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக மும்பை மக்களின் உயிர் நாடியான மின்சார ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே ஆகிய 3 வழித்தடங்களிலும் மின்சார ரெயில்கள் அரை மணி நேரம் வரையிலும் தாமதமாக இயங்கின.

    கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    மழையின் போது, வடலா கிழக்கு பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 கார்கள் உள்பட 15 வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு மண்ணில் புதைந்தன.

    மும்பை மற்றும் தானேயில் பெய்த பலத்த மழைக்கு 4 பேர் பலியானார்கள்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 23 செ.மீ. மழையும், கொலபாவில் 10 செ.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதுதவிர விராரில் 18 செ.மீ., வசாயில் 18 செ.மீ., மாணிக்பூரில் 16 செ.மீ., மாண்ட்வியில் 19 செ.மீ. மழையும் பெய்து இருந்தது.

    மும்பையில் அடுத்த 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரையில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.  #Mumbairain  #Tamilnews 
    Next Story
    ×