search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்திரா, மோடி, மன்மோகன்சிங் சினிமா படம் தயாராகிறது
    X

    பாராளுமன்ற தேர்தலுக்காக இந்திரா, மோடி, மன்மோகன்சிங் சினிமா படம் தயாராகிறது

    பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, மன்மோகன்சிங் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் பற்றி சினிமா படம் தயாரிக்கப்படுகிறது. #theaccidentalprimeminister #BJP
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவுபெற்று 5-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாராகி வருகிறார்.

    மோடி பதவி ஏற்றதும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா தொடர் வெற்றிகளை குவித்தது. அதில் ஒருபடி மேலே போய் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளை சுருட்டிவாரி வீசியது. ஆனால் சமீபகாலமக பா.ஜனதாவுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

    மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே கடும் போராட்டத்துக்கு பின்தான் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு உத்தரபிரதேசத்தில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தல்களிலும் தற்போது நடந்த இடைத்தேர்தல்களிலும் பா.ஜனதா தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

    கர்நாடகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி கடுமையாக பிரசாரம் செய்தும் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரஸ், ஜே.டி. எஸ். கட்சியுடன் சேர்ந்து பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடாமல் செய்து விட்டது.

    இதனால் பாராளுமன்ற தேர்தலை நினைத்து பா.ஜனதா வட்டாரத்தில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் தரப்பில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்ற நினைப்பை சமீபத்திய தேர்தல்கள் உணர்த்தி இருக்கிறது.

    எனவே பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. சினிமாக்கள் மூலமும் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.



    பா.ஜனதா சார்பில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா, மன்மோகன்சிங் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோர் பற்றி சினிமா படம் தயாரிக்கப்படுகிறது.

    ‘‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் சினிமாவில் இந்திரா காந்தி, நரேந்திர மோடி ஆகியோரை ஒருவருடன் ஒருவர் ஒப்பிட்டு அவர்களது அரசியல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் இடையில் மன்மோகன்சிங் பற்றிய நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.

    இந்திராவை துர்காவாக சித்தரிக்கும் அதே வேளையில் அவசரநிலை பிரகடனம் செய்து நீதித்துறையை செயல் இழக்க செய்துவிட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

    பிரதமர் மோடியைப் பற்றி குறிப்பிடும் போது அவர் சாதாரண ஏழைகளுக்காக போராடியது. நாட்டின் மீதான அவரது பற்று மற்றும் ஆட்சிக்கு வந்தது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது.

    இதில் நடிகரும் பா.ஜனதா எம்.பி.யுமான பரேஷ் ராவல் பிரதமர் மோடியாக நடிக்கிறார். குஜராத் கலவரம் இதில் இடம்பெறுமா என்று அவரிடம் கேட்டதற்கு எல்லா சம்பவங்களும் உண்டு என்றார்.

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும் நடிகருமான அனுபம் கேர், மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கிறார். அனுபம் கேரின் மனைவி கிரன்கேர் பா.ஜனதா எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. #theaccidentalprimeminister #BJP
    Next Story
    ×