search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணாமூச்சி ஆடும் கர்நாடக தேர்தல் முடிவுகள் - தாமரை மலர்வதை கை தடுக்குமா?
    X

    கண்ணாமூச்சி ஆடும் கர்நாடக தேர்தல் முடிவுகள் - தாமரை மலர்வதை கை தடுக்குமா?

    பங்குச்சந்தை புள்ளிகளைப் போல் கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பான முன்னிலை நிலவரங்கள் ஏற்ற - இறக்கங்களை சந்தித்துவரும் நிலையில் ஆட்சி நாற்காலி யாருக்கு? என பார்ப்போம். #KarnatakaElections #KarnatakaVerdict #BJP #Congress
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.

    வாக்குப்பதிவுக்கு பின்னர் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, காங்கிரஸ் - பா.ஜ.க. வேட்பாளர்கள் பல தொகுதிகளில் முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்து வருகின்றனர். முதல் மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மிக மோசமான வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். சிகாரிபுரா தொகுதியில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா 35 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதியது.



    இதையடுத்து, அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சூறாவளி பிரசாரச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அனல் பறக்கும் வகையில் மேடைகளில் முழக்கமிட்டார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் பலர், உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் உள்ளிட்ட பல பா.ஜ.க. பிரமுகர்கள் கர்நாடக தேர்தல் களத்தை கலங்கடித்தனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சளைக்காமல் ‘ஒன் மேன் ஆர்மி’யாக மாநிலத்தை வலம் வந்தார். இறுதிக்கட்ட பிரசாரத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆவேசமாக உரையாற்றினார்.

    மாநிலத்தின் மூன்றாவது சக்தியாக கருதப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் பிரசாரத்தில் பின்தங்கவில்லை.

    இந்நிலையில், இன்று பிற்பகல் ஒருமணி நிலவரப்படி பா.ஜ.க. வேட்பாளர்கள் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பா.ஜ.க. வேட்பாளர்கள் 86 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 70 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

    இதை வைத்து பார்க்கும்போது, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க. செல்லலாம் என கருதப்படுகிறது.

    ஒருவேளை ஆட்சி அமைக்க தேவையான 112 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை கொண்ட தனிப்பெரும்பான்மை பா.ஜ..க.வுக்கு கிடைக்காமல் போனால்.. எதிர்க்கட்சியாகும் அளவுக்கே உறுப்பினர்கள் கிடைப்பார்கள் என யூகிக்கப்படும் காங்கிரஸ் கட்சி, தற்போதைய முன்னிலை நிலவரப்படி, பா.ஜ.க.வின் 86-ஐ விட, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களின் ஒட்டுமொத்த முன்னிலை இடங்கள் 118 என மனக்கணக்கு போட தொடங்கி விட்டதாக தெரிகிறது.

    சித்தராமையாவுக்கு பதிலாக தலித் இனத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரி பதவியில் அமர்த்த காங்கிரஸ் முன்வந்தால் தேவேகவுடாவின் மனதை வென்று மதச்சார்பற்ற ஜனதா தளம் உறுப்பினர்களுடன் தனது ஆட்சியை கூட்டணி ஆட்சியாக தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    ஒருவேளை, தனக்கோ தனது மகன் குமாராசாமிக்கோ முதல் மந்திரி பதவி தந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க ஒத்துழைப்பதாக தேவேகவுடா நிபந்தனை விதித்தால் அதற்கும் காங்கிரஸ் சம்மதிக்கலாம் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

    “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பதுபோல் இந்த கூட்டல், கழித்தல் கணக்குகளுக்கு இடம் அளிக்காமல் “எந்த கை மறைத்தாலும் தாமரை மலர்வதை தடுக்க முடியாது” என பா.ஜ.க. வேறொரு கணக்கு போடக்கூடும்.

    இன்று வெளியாகும் முடிவுகள் போக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் மற்றும் ஒருவேளை குமாரசாமி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்யவுள்ள ஒரு தொகுதி என இந்த மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தல்கள் ஆட்சி அமைக்கப்போகும் கட்சி எதுவாக இருந்தாலும் அதற்கு பலம் சேர்க்கும் என்பது உறுதி.
    Next Story
    ×