search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் நாற்காலியை விட்டு கொடுக்கிறேன் - ம.பி. முதல்வர் பேச்சால் பரபரப்பு
    X

    முதல்வர் நாற்காலியை விட்டு கொடுக்கிறேன் - ம.பி. முதல்வர் பேச்சால் பரபரப்பு

    முதல்வர் நாற்காலியை விட்டு கொடுக்கிறேன், அந்த நாற்காலி இப்போது காலியாகத்தான் உள்ளது யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம் என்று சிவராஜ் சிங் சவுகான் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #CMShivrajSinghChouhan #BJP

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    அவரது ஆட்சி இன்னும் சில மாதங்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையடுத்து நவம்பர் மாதம் மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்து வருவதாக தகவல்கள் வெளியானது. அங்கு நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் குறைந்து போனது.

    இதைத் தொடர்ந்து சிவராஜ்சிங் சவுகானுக்கு பதில்வேறு ஒருவரை முன் நிறுத்தி தேர்தலை சந்திக்க பா.ஜ.க. தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. மேலிடத்தின் முடிவால் சிவராஜ்சிங் சவுகான் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று விழா ஒன்றில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், “நான் முதல்-மந்திரி நாற்காலியை விட்டுத் தருகிறேன். அந்த நாற்காலி இப்போது காலியாகத்தான் உள்ளது. யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து கொள்ளலாம்” என்றார்.

    அவர் இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. “முதல்வர் ஏன் இவ்வாறு பேசுகிறார்?” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

    இதற்கிடையே விழா முடியும் முன்பே அவர் பாதியில் எழுந்து சென்று விட்டார். அது பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுடன் சிவராஜ்சிங் சவுகான் பேச்சு நடத்துகிறார். அப்போது மத்தியபிரதேச மாநில பா.ஜ.க.வில் மாற்றம் செய்வது குறித்து அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையே சிவராஜ்சிங் சவுகான் முதல்வர் நாற்காலியை விட்டு செல்வதாக பேசியதை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் விமர்சித்துள்ளார். “வரும் தேர்தலில் பா.ஜ.க. தோற்கும் என்பதை சிவராஜ்சிங் சவுகானின் பேச்சு உறுதிப்படுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார். #CMShivrajSinghChouhan #BJP

    Next Story
    ×