என் மலர்
செய்திகள்

பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி நட்புறவை சீர்குலைக்க முடியாது: மாயாவதி
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த 2 எம்.பி. தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால் இரு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது.
இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு போட இருந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து பகுஜன் சமாஜ் வேட்பாளரை தோற்கடித்தது.
இது சம்பந்தமாக மாயாவதி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
மேல்-சபை எம்.பி. தேர்தலில் மாநில பாரதிய ஜனதா அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எங்கள் வேட்பாளரை தோல்வி அடைய செய்துள்ளது.
இதில், பணம் விளையாடி இருக்கிறது. குதிரை பேரம் நடந்துள்ளது. பாரதிய ஜனதாவின் நடவடிக்கைகள் அனைத்தும் அராஜக போக்கில் இருந்தது.
அவர்களுக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையிலும் வேண்டும் என்றே கூடுதல் வேட்பாளரை நிறுத்தி தேர்தல் ஓட்டு பதிவை திணித்து விட்டனர்.
இது போன்ற நடவடிக்கைகள் மூலம் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி இடையே ஏற்பட்டுள்ள நட்புறவை சீர்குலைத்து விடலாம் என நினைக்கிறார்கள். அது, நடக்காது.
பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒரே இலக்காக கொண்டு இருக்கிறோம். அதை முறியடிப்பதற்கு பாரதிய ஜனதா கட்சியால் முடியாது.
இவ்வாறு மாயாவதி கூறினார். #Mayawati #tamilnews






