என் மலர்
செய்திகள்

இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்தது: அருண்ஜெட்லி தகவல்
இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் 2016-17-ம் ஆண்டில் குறைந்து போனதாக பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார்.
புதுடெல்லி :
பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறியதாவது:-
முந்தைய நிதி ஆண்டை (2015-16) விட கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து உள்ளது. முந்தைய ஆண்டில் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டில் 7.1 சதவீதமாக குறைந்தது. அதே நேரம், இதுவரை இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது என்று கூறுவது மிகைப்படுத்தப்படும் வாதம். 0.1 வளர்ச்சி என்றாலும் கூட உலகில் 2-வது வேகமான வளர்ச்சியை இந்தியா பெறும் என்று பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் கூறி இருக்கின்றன.
2016-ல் நிலவிய உலகளாவிய பொருளாதார மந்த நிலை, முதலீடு விகிதம் குறைவு, தனியார் தொழில் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் காணப்பட்ட தளர்வு, தொழில்துறையில் குறைவான வளர்ச்சி விகிதம் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
மேலும் தொழில் மற்றும் சேவைத்துறைகளில் காணப்பட்ட குறைந்த வளர்ச்சி விகிதம் 2016-17-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் எதிரொலித்தது.

மத்திய புள்ளியியல் துறை அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 2014-15-ல் 7.5, 2015-16-ல் 8, 2016-2017-ல் 7.1 சதவீதமாக இருக்கிறது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் வேகமான வளர்ச்சிதான்.
பன்னாட்டு நிதியத்தின் மதிப்பீட்டின்படி இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறைவாக உள்ளது என கூறப்பட்டாலும் கூட 2016-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டது. 2017-ல் உலகின் மிகவேமாக பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பெற்றுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவதற்காக உற்பத்தி, போக்குவரத்து, மின்சக்தி துறைகள், நகரப்புற மற்றும் கிராமப்புற கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தவிர அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஜவுளித்துறைக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story