search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதாருக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    ஆதாருக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    ஆதாரை கட்டாயமாக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் நலிவடைந்தோர், ஏழைகள் உதவி பெறுவதற்காக ஆதார் எண்ணை வங்கி கணக்கு, பான், சமையல் எரிவாயு, ரேஷன் கார்டு போன்றவற்றுடன் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து தொலைத் தொடர்பு துறை இலாகா செல்பேன் எண்ணுடன் ஆதாரை கட்டாயம் இணைக்குமாறு அனைத்து செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களையும் அறிவுறுத்தி இருக்கிறது.

    இதை எதிர்த்து பல்வேறு மனுக்கள் தனிப்பட்ட நபர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேற்கு வங்காள அரசும் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பாராளுமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இது போன்ற மனுவை மாநில அரசு எவ்வாறு தாக்கல் செய்ய முடியும். இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ஆகும். வேண்டும் என்றால் மேற்கு வங்காள முதல்-மந்திரி இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்யலாம்” என்றனர்.



    அப்போது மேற்கு வங்காள அரசு சார்பாக ஆஜராகி வாதிட்ட மூத்த வக்கீல் கபில்சிபல், “மாநிலத்தின் சமூக நலத் திட்டங்களுக்கான மானியத்தை மாநில அரசுதான் வழங்கி வருகிறது. அதனால் மேற்கு வங்காள அரசின் தொழிலாளர் துறை இந்த வழக்கை தொடர்ந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

    அதற்கு, நீதிபதிகள் “மாநில அரசு ஏன் இந்த வழக்கை தொடர்ந்தது எதற்காக என்பதை எங்களுக்கு தெளிவு படுத்தி விட்டீர்கள். இது பரிசீலனைக்கு தேவைப்படும் விஷயம். ஆனால், இந்த மனுவை மாநில அரசு தாக்கல் செய்யக் கூடாது. தனிப்பட்ட நபர்தான் செய்ய முடியும்” என்று மீண்டும் குறிப்பிட்டனர்.

    இதற்கிடையே, செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை எதிர்த்து தனி நபர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.



    இதற்கான பதிலை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படியும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதேபோல் ஆதாரை பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த இன்னொரு வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது இந்த விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுக்களை அடுத்த மாதம் (நவம்பர்) கடைசி வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தனர்.
    Next Story
    ×