search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார் - நாளை மீண்டும் முதல்வராக பதவியேற்பு
    X

    பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் நிதிஷ்குமார் - நாளை மீண்டும் முதல்வராக பதவியேற்பு

    ராஜினாமா செய்துள்ள நிதிஷ்குமார், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி ஆதரவோடு நாளை மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மெகா கூட்டணி ஆட்சியில் உள்ளது. தொடக்க இந்த கூட்டணி சுமூகமாக சென்றாலும், கடந்த சில மாதங்களாகவே பூசல் அதிகரித்து வந்தது.

    ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லாலுவின் மகனும், துணை முதல்வரான தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.  ஆனால் தேஜஸ்வி ராஜினாமா செய்ய மாட்டார் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இதனால் நாளுக்கு நாள் பிளவு அதிகரித்து வந்தது.



    இந்த நிலையில், முதல்-மந்திரி நிதிஷ்குமார் திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். பீகார் ஆளுநரும் நிதிஷ்குமாரின் ராஜினாமா மனுவை ஏற்றுக் கொண்டார். அடுத்த முடிவு எடுக்கும் வரை முதல்வராக தொடர வேண்டும் என ஆளுநர் கூறினார்.

    இதனையடுத்து, நிதிஷ்குமாரின் ராஜினாமா முடிவுக்கு பிரதமர் மோடி உடனடியாக வரவேற்பு தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஊழலுக்கு எதிரான போரில் இணைந்துள்ளது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.



    இதனிடையே, பீகார் மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சுஷில் மோடி, நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் நிதிஷ்குமார் இல்லத்து சென்று சந்தித்தனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே ஆலோசனை நடைபெற்றது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, நிதிஷ்குமார் பீகார் முதல்வராக இருக்க ஆதரவு அளிப்போம் என்று கூறினார்.

    மேலும், பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிகள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு பதவியேற்பு நடைபெறவுள்ளது.

    ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டணிக்கு மொத்தம் 129 இடங்கள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 123 இடங்களே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பீகார் சட்டசபை நிலவரம்(243 தொகுதிகள்):-

    ஐக்கிய ஜனதா தளம் - 71

    ராஷ்டிரிய ஜனதா தளம் - 80

    காங்கிரஸ் - 27

    பா.ஜ.க  - 53

    பா.ஜ.க கூட்டணி - 5

    சுயேட்சைகள் - 4

    சிபிஐ(எம்.எல்) லிபரேஷன் - 3
    Next Story
    ×