என் மலர்
இந்தியா

எதிரே வந்த வாகனங்களை மோதித் தள்ளிய லாரி.. கோர விபத்தில் 12 பேர் பலி
- கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது விபத்து ஏற்படுத்தியது.
- லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோர சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர்.
நேற்று மதியம், ஜெய்ப்பூரில் லோகாமண்டி பகுதியில் உள ஹர்மதா என்ற இடத்தில், வேகமாக வந்த ஒரு காலி சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு எதிரே வந்த 17 வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.
இந்த கோர விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் உள்ளூர் மக்கள், போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜெய்ப்பூர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சோனி கூறியுள்ளார்.
விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் நடந்த இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த மற்றொரு விபத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் அதில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






