என் மலர்
இந்தியா

லாரி-டிராக்டர் மோதி 10 தொழிலாளர்கள் பலி
- இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம்:
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி டிராக்டர் டிராலி மீது மோதி தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வாரணாசியை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பதோஹியில் கூரை அமைக்கும் பணிக்காக சென்றனர். அங்கு பணியை முடித்து விட்டு நள்ளிரவில் 13 தொழிலாளர்களும் டிராக்டரில் வாரணாசிக்கு திரும்பினர்.
தொழிலாளர்கள் 13 பேரும் டிராக்டரின் பின்பக்கம் டிராலியில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பிரயாக்ராஜ்-வாரணாசி நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் மிர்சாபூர் மாவட்டம் கச்சுவா அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி டிராக்டர் டிராலியில் பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டர் டிராலி நொறுங்கி அதில் இருந்த தொழிலாளர்கள் 13 பேரும் இடிபாடுகளில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். நள்ளிரவு நேரம் என்பதால் மீட்பு பணி தாமதமானது.
மிர்சாபூர் போலீஸ் சூப்பிரண்டு அபிநந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பானு பிரதாப் (வயது25), விகாஸ்குமார் (20), அனில் குமார் (35), சூரஜ்குமார் (22), சனோகர் (25), ராகேஷ்குமார் (25), பிரேம்குமார் (40), ராகுல்குமார் (26), நிதின் குமார் (22), ரோஷன் (27) என தெரியவந்தது.
மேலும் தொழிலாளர்கள் ஆகாஷ் (18), ஜமுனி (26) அஜய்சரோஜ் (50), ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் 3 பேரும் பனராஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த தொழிலாளர்கள் வாரணாசியை அடுத்த மிர்சா முராத் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
விபத்தில் 10 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






