என் மலர்tooltip icon

    கதம்பம்

    • இதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும்.
    • இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்.

    கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நாக்கில் படும்பொழுது நாக்கிலுள்ள சுவை மொட்டுக்கள் அவற்றை நெருப்புப் பிராணனாக (சக்தி) மாற்றி உடல் முழுவதும் அனுப்பி வைக்கின்றன.

    நெருப்பு சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இதயம், இதயத்தின் மேல் உறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுபாட்டு உறுப்பு ஆகியவை. இதற்கான வெளி உறுப்பு நாக்கு. இதற்கான உணர்ச்சி மகிழ்ச்சி.

    நம்மில் பலருக்குத் திடீரென மகிழ்ச்சி ஏற்பட்டால் உடனே நெஞ்சு படபடக்கும்; வியர்வை வரும். இது எதனால் ஏற்படுகிறது? அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி உடலிலுள்ள நெருப்பு சக்தியைச் சாப்பிட்டு விடுகிறது. உடலில் நெருப்பு சக்தி குறைவதால் இதயத்திற்குத் தேவையான சக்தி கிடைக்காமல் அது படபடக்க ஆரம்பிக்கிறது.

    நாக்கும் இதயமும் ஒரே வடிவத்தில் இருக்கும். இதயத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் அது நாக்கில் தெரியும்.

    இக்காலத்தில் நம்மில் பலருக்குத் துணிவு கிடையாது. நாம் அனைவரும் கோழைகளாக இருக்கிறோம். பல விஷயங்களில் நாம் துணிந்து எந்த வேலையும் செய்வதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவைகளைச் சேர்த்துக் கொள்ளாததுதான். கசப்பான பொருள்களை அதிகமாகச் சாப்பிடுபவர்கள் துணிவுடையவர்களாக இருப்பதைப் பாருங்கள்!

    எனவே, நமது நாக்கு எவ்வளவு கசப்பைக் கேட்கிறதோ அந்த அளவுக்குக் கசப்பான, துவர்ப்பான பொருள்களைச் சாப்பிடுவதன் முலமாக இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும். துணிவும் பெற முடியும்.

    பாகற்காய்,

    சுண்டக்காய்,

    கத்தரிக்காய்,

    வெந்தயம்,

    பூண்டு,

    எள்ளு,

    வேப்பம்பூ,

    ஓமம்

    போன்றவற்றில் இந்த கசப்புச் சுவை மிகுதியாய் உள்ளது. தேங்காய் மற்றும் தேன் இவற்றை நம் உடல் கசப்பு சுவையாக எடுத்துக்கொள்ளும்.

    பாக்கு,

    வாழைப்பூ,

    வாழைக்காய்,

    நெல்லிக்காய்,

    மாதுளை,

    மாவடு,

    மஞ்சள்,

    அவரை,

    அத்திக்காய்

    போன்ற காய் வகைகளில் துவர்ப்புச் சுவை மிகுதியாய் உள்ளது.

    - பாஸ்கர்

    • அழகு! சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்துவிடும் ஆற்றல் பெற்றது.
    • உங்கள் நிறத்துக்கும், உடல்வாகுக்கும், ஏற்ற நிறத்தில் உடை இருப்பது நல்லது.

    அழகாயிருப்பவரை , அழகாய் உடுப்பவரை, அழகாய் நடப்பவரை, அழகாய் பேசுபவரை, அழகாய் சிரிப்பவரை உலகம் நேசிக்கிறது. அழகை உலகம் விரும்புகிறது.

    உங்களுக்கு எத்தனை வயதானால் என்ன உங்களை அழகாய் வெளிப்படுத்துங்கள். அழகாக இருப்பதும் ஒரு பண்புதான் என்கிறது உளவியல்.

    அழகு! சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்துவிடும் ஆற்றல் பெற்றது. அதனால்தான் அழகானவர்களை வரவேற்பறைகளில் விழாக்களின் மேடையில் நாம் முன்நிறுத்துகிறோம்.

    அழகாக உடுத்திக்கொண்டு வியர்வை நாற்றம் போக நறுமணம் பூசிக்கொண்டு ஓரிடத்திற்கு செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது போகும் வேலை பாதி முடிந்துவிட்டது போலத்தான். அழகாக எப்போதும் இருக்க சிரிக்க முயற்சியுங்கள், அழகால் வெற்றி நிச்சயம்.


    மலர்களைப் பாருங்கள். அவற்றின் மணமும் அழகும் நிரந்தரமல்ல. மிகக் குறைந்த ஆயுள் கொண்டதுதான். ஆனாலும் அவற்றால் அழகான பெண்களைக் கவர்ந்துவிட முடிகிறதே.

    மலர்களின் அழகும் மணமும் எல்லாரையும் ஈர்க்கக் கூடியது. அவற்றைப்போல நாமும் அழகும் மணமும் கொண்டிருக்கும்போது எல்லோராலும் ரசித்துப் பார்க்கப்படுவோம்.

    கண்ணுக்கு மட்டும் அழகாய்த் தோன்றுவது உண்மையான அழகு அல்ல. எது நெஞ்சைக் கொள்ளை கொண்டு உங்களை ஆக்ரமித்துக் கொள்கிறதோ அதுவே அழகு. காந்திஜியின் ஆடை ஏழை விவசாயியின் ஆடையைப் போன்று அரை ஆடைதான். ஆனாலும் அது சுத்தமாக இருந்தது. உடுத்தும் முறையில் அழகு இருந்தது.

    "உனக்காக நீ உணவு அருந்த வேண்டும். பிறருக்காக நீ உடை உடுத்த வேண்டும்" என்கிறது பள்ளிப்பாடம்.

    சுத்தம் சோறு போடும். அசுத்தம் நோயில் போடும்.


    சுறுசுறுப்பு ஆரோக்கியமும் அந்தஸ்தும் கொடுக்கும். சோம்பேறித் தனம் சொங்கியிருக்கும் வறுமையை அளிக்கும்.

    மேற்கண்ட வாசகங்களுக்கு பொருள் விளக்கம் தேவையில்லை. எளிதில் புரிந்துவிடும். ஒவ்வொருவரும் அவசியம் நினைவில் கொள்க. உங்களுடைய வயது, தொழில், வருவாய், வசதி போன்றவற்றுக்கேற்ற மாதிரி உடைகளும் இருப்பது சிறப்பு.

    இளைஞன் முதியவர் போன்று. முதியவர் இளைஞனைப் போன்றும் உடை அணிவது கேலிக்குரியதாகும். உங்கள் நிறத்துக்கும், உடல்வாகுக்கும், ஏற்ற நிறத்தில் உடை இருப்பது நல்லது.

    ஒருவர் எவ்வளவு பெரிய மனிதனாக, பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவருடைய தோற்றம் அழகானதாக நல்ல தோற்றமாக தெரியவில்லை என்றால் யாரும் ரசிக்க மாட்டார்கள்.

    வாழ்க்கையில் சிலர் தோல்வியடைவதற்கும், பிறரின் கவனத்தில் நிற்காமல் போவதற்கும் இதுவும் ஒரு காரணம்.

    - சபீதா ஜோசப்

    • முருதேஸ்வரர் கோவில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானது.

    இந்தியாவில் உள்ள உயரமான 10 கோவில் கோபுரங்கள்:

    1.முருதேஸ்வரர் கோவில் - 249 அடி.

    கர்நாடகா மாநிலத்தில் பட்கல் என்னுமிடத்தில் அமைந்துள்ள முருதேஸ்வரர் கோவில் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 249 அடி உயரம் கொண்டது. 20 அடுக்குகள் கொண்ட இந்த கோபுரம் நாட்டின் மிக உயரமான கோபுரமாக உள்ளது.

    2. ரங்கநாதசுவாமி கோவில் - 239.5 அடி திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதஸ்வாமி கோவில் தென்னிந்தியாவின் வைஷ்ணவ கோவில்களில் மிகவும் புகழ்பெற்றது, 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ரங்கநாதஸ்வாமி கோவிலின் கோபுரம் 239.5 அடி உயரம். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரம் ஆகும்.

    3. அண்ணாமலையார் கோவில் - 216.5 அடி. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இது சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இக்கோவிலின் இராஜகோபுரம் 217 அடி உயரம் கொண்டதாகும்.

    4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்- 193.5 அடி.


    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலின் கோபுரம் 193.5 அடி உயரம். தமிழ்நாடு அரசின் சின்னமாக இக்கோவிலின் கோபுரம் விளங்குகிறது.

    5. திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில் கோபுரம் - 192 அடி.

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இதன் கோபுரம் 192 அடி உயரம்.

    6. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரம்- 190 அடி

    திருக்கச்சியேகம்பம்- எனப் பழைய சமய நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். கோவிலின் கோபுரம் 190 அடி உயரமுடையது.


    7. மதுரை அழகர் கோவில் கோபுரம்- 187 அடி

    அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இந்த கோவில் கோபுரத்தின் உயரம் 187 அடி..

    8. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்- 170அடி.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் வடக்கு கோபுரம் 170 அடி உயரம் உடையது.

    9.கும்பகோணம் சாரங்கபாணி கோவில், கோபுரம் - 164 அடி

    சாரங்கபாணி சுவாமி கோவில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இதன் ராஜகோபுரம் 164 அடி உயரம் உடையது.

    10. மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கோபுரம் - 154 அடி.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் ஒரு வைணவக் கோவில் ஆகும். இந்த கோவிலின் ராஜ கோபுரம் 154 அடி உயரம் கொண்டது.

    -சிவானி கவுரி

    • சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன.
    • எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்.

    மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது 12 அங்குலம் காற்றை உள்ளிழுத்து 8 அங்குலம் நிறுத்தி 4 அங்குலம் வெளிவிட வேண்டும். இதே முறையில் ஒருவனுக்கு சுவாசம் தொடர்ந்து ஓடினால் அவன் 120 வருடங்கள் வாழ்வான். இவ்வாறு சுவாசம் குறைய ஆயுளும் கூடும். சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.

    அதனால்தான், சுவாசத்தை அடக்குவதால் ஆமைகள் 300 வருடங்கள், 400 வருடங்கள் வாழ்கின்றன. இதைப் பற்றி உணர்ந்த நாம் பின்பற்றுவதில்லை.

    நம்முள் சுவாசம் நடக்கும் அளவு

    அமர்ந்திக்கும் போது - 12 அங்குலம்

    நடக்கும் போது - 16 அங்குலம்

    ஓடும் போது - 25 அங்குலம்

    உறங்கும் போது - 36 அங்குலம்

    உடலுறவு கொள்ளும் - 64 அங்குலம் போது

    சுவாசம் குறைத்தால் ஏற்படும் நன்மைகள்..

    *11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.

    *10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.

    *9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.

    *8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.

    *7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.

    *6 அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.

    *5 அங்குலமாக குறைந்தால் காயசித்து உண்டாகும்.

    *4 அங்குலமாக குறைந்தால் அட்டமாசித்து உண்டாகும்.

    *3 அங்குலமாக குறைந்தால் நவகண்ட சங்சாரம் உண்டாகும்..

    *2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல்.

    *1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்.

    *உதித்த இடத்திலேயே நிலைத்தால் சமாதி நிலை அன்ன பானம் நீங்கும்.

    எந்தெந்த நாட்கள் எந்த சுவாசம் ஓட வேண்டும் என்பதைப் பற்றி காண்போம்

    ஞாயிறு, செவ்வாய் , சனி- இம் மூன்று நாட்களிலும் சூரியகலை ஓட வேண்டும்.

    வெள்ளி, திங்கள் , புதன்- இம் மூன்று நாட்களிலும் சந்திரகலை ஓட வேண்டும்.

    வியாழக்கிழமை -பூர்வபட்சம் (வளர்பிறை) -சந்திர கலை ஓட வேண்டும்.

    அமரபட்சம் (தேய்பிறை ) - சூரிய கலை ஓட வேண்டும்.

    இம் முறையில், அதிகாலை 4 மணிக்கு சுவாசம் நடக்கு வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நடந்தால் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

    சனிக்கிழமை மட்டும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை சூரிய கலையில் சுவாசம் ஓட வேண்டும்.

    -தண்டபாணி

    • கதைகள் என்ன? அவர்கள் பார்க்கும் செய்திகள் என்ன? கொஞ்சம் அலசுவோம்.
    • கடைசியாக தமிழ் நடிகர்கள் சிலரது சமீபத்திய படங்களின் பெயர்களைச் சொன்னேன்.

    நம் வீட்டுப் பிள்ளைகளுடன் நாம் என்ன பேசுகிறோம்? இந்த சமூக வலைதள உலகத்தில் அவர்கள் கேட்கும் கதைகள் என்ன? அவர்கள் பார்க்கும் செய்திகள் என்ன? கொஞ்சம் அலசுவோம்...

    என்னுடைய வகுப்பறையில் ஈர்ப்பியல் பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன். அப்பொழுது gravity என்ற ஒரு ஆங்கிலப் படம் வந்துள்ளது பார்த்தீர்களா? என்றேன். 100 பேரில் ஒருத்தர் தான் பார்த்தேன் என்றார். ' Interstellar ' என்று ஒரு படம் வந்தது. அதை யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று கேட்டேன். ஒருவரும் பார்க்கவில்லை என்றனர்.

    கடைசியாக தமிழ் நடிகர்கள் சிலரது சமீபத்திய படங்களின் பெயர்களைச் சொன்னேன். அனைவரும் ஒரே குரலில் பார்த்தோம் என்றனர்.

    ஏன் இந்த நாடு இன்னும் உலக நாடுகளிடம் இருந்து அறிவியலையும், புதிய கண்டுபிடிப்புகளையும் பிச்சை எடுக்கிறது தெரியுமா? என்றேன். அனைவரும் மவுனமாக இருந்தனர்.

    பாவம்... எதைப் பார்க்க வேண்டும்? எதைப் பற்றிப் பேச வேண்டும்? எதையெல்லாம் தேடி ஓட வேண்டும்? என்று நமக்கே (ஆசிரியர்கள், பெற்றோர்கள்) தெரியாத பொழுது, நம் பிள்ளைகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

    அறிவியலை எந்த நாடு கொண்டாடுகிறதோ, அதுவே எப்பொழுதும் உலகை ஆளும் தகுதி பெறும்.

    சமூக வலைதளங்களில் நாம் பார்ப்பவை என்ன? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

    "அந்த சினிமா கதை எப்படி உருவானது தெரியுமா?".. இயக்குனர் பகீர் தகவல்...


    "அந்த படத்தில் நடித்த நடிகைக்கும் நடிகருக்கும் கெமிஸ்ட்ரி எப்படி இருந்தது தெரியுமா?"... இயக்குனர் சுவாரசிய தகவல்...

    "அந்த பாடல் வரியை எப்படி உருவாக்கினோம் தெரியுமா?"... பாடல் ஆசிரியர் பேட்டி...

    "இந்த இசை எப்படி பிறந்து தெரியுமா?"..படத்தின் இசை குறித்து கதை ஆசிரியரின் கதை...

    "அந்த நடிகர் எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறினார் தெரியுமா?"

    அந்த நடிகர் சொன்ன குட்டிக் கதை...

    "அந்த நடிகர் யார் வீட்டுக் வந்தாலும் சோறு போடுவார் தெரியுமா?"... என்றார் இந்த நகைச்சுவை நடிகர்...

    "அந்த நடிகர் அவர் காலில் பட்ட அழுக்கை அவரே துடைத்துக் கொண்டார் தெரியுமா?"...

    "அந்த நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?"...

    " அந்த நடிகைக்கு இவர் எத்தனாவது கணவர் தெரியுமா?"...

    வாழ்க்கை என்றால் என்ன? விளக்கம் சொல்கிறார் இந்த இயக்குனர்...

    வாழ்கையில் சாதிப்பது எப்படி? விளக்குகிறார் அந்த நடிகர்...

    இதுபோன்ற சகிக்க முடியாத கன்றாவிகள் தான் கொட்டிக் கிடக்கின்றன சமூக வலைத்தளம் முழுவதும்...

    "இந்த பிரபஞ்சம் ஏன் தோன்றியது?"

    "உயிர் என்றால் என்ன?"

    "நட்சத்திரங்கள் ஏன் ஒளிர்கின்றன?"

    "மனம் என்றால் என்ன?"

    "பருவநிலை மாற்றம் ஏன் வருகிறது?"

    "புயல் ஏன் வீசுகிறது?"

    "நியூட்டனின் விதிக்கும் ஐன்ஸ்டீன் விதிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?"

    "பொருளாதர கல்வி என்றால் என்ன?"

    "வணிகம் என்றால் என்ன?"

    இப்படி நம் பிள்ளைகளிடம் பேச, கேட்க, விவாதிக்க லட்சம் கேள்விகள் உள்ள பொழுது... ஏன் இந்த நடிகர் நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...?

    ஏன் அறிவியல் மேதைகளின் வரலாறுகள், பேட்டிகள் கவனிக்கப்படாமல், கேவலம் இந்த நடிகர், நடிகளைகளின் கிசுகிசுக்களை கவனிக்க வேண்டி நிர்பந்திக்க படுகிறோம்?

    யார் இந்த இழிவான கதைகளை மட்டுமே நம் மீது திணிகின்றனர்?

    ஆக்கபூர்வமான கேள்விகளை நோக்கி நகருங்கள்...

    அறிவியலையும், அறவியலையும் நம் பிள்ளைகளுக்கு கற்பிக்கத் தொடங்குங்கள்...

    அறிவியல் மேதைகளே.. நமக்கான முன் மாதிரிகள் என்று நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்...

    புதிய வரலாற்றை அறிவியலின் வழியே எழுத தொடங்குங்கள்...

    -பேராசிரியர் ஆ. அருள் இனியன்

    • பலரும் அதிக காரம், கொழுப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம்.
    • இஞ்சி டீ நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் பாதிக்கும் புற்றுநோய் நமது அலட்சியத்தாலும், நல்லது என நினைத்துக்கொண்டு சில உணவுகளை அல்லது பாக்கு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதும்கூட புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

    எங்க வீட்டுல மஞ்சள், சீரகம், மிளகு இல்லாம சமையல் இல்லன்னு நம்ம மக்கள் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில் தென் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு செரிமான மண்டல புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கவலை தருகின்றன.

    எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அஜினாமோட்டா மற்றும், சுவையூட்டிகள், செயற்கை உப்புகள் சேர்க்கப்பட்ட உணவுகள் உண்பது அதிகரித்து வருகிறது. இன்றைக்கு பிரியாணி இல்லாத விருந்தே கிடையாது. பலரும் அதிக காரம், கொழுப்பு நிறைந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம்.

    வறுத்த, பொரித்த, தந்தூரி வகை உணவுகளில் புற்று நோய் செல்களை தூண்டும் கார்சினோஜென் என்ற ரசாயனம் நிறைந்துள்ளது. நேரடியாக தீயில் சுட்டு எடுக்கப்படும் தந்தூரி உணவுகளில் இருந்து நைட்ரா சமைன் என்ற வேதிப்பொருள் வெளியாகிறது. அது புற்றுநோயை தூண்டக்கூடியது.

    வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து போடலாம். ஆனால், வாய் நாற்றத்தைப் போக்கக்கூடியது என்பதால் அவ்வப்போது பாக்கு மெல்வது ஒருகட்டத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம்.


    ஒருவர் தினமும் பாக்கு மெல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு நலக்குறைவு ஏற்பட மருத்துவரிடம் பரிசோதித்தபோது இதை இப்படியே விட்டிருந்தால் புற்றுநோயாகி இருக்குமென்று சொல்லியிருக்கிறார்.

    தாம்பூலத்திற்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாக்கை எந்நேரமும் வாயில்போட்டு மென்று கொண்டிருந்தால் அது பிரச்சனையை உண்டாக்கலாம்.

    கைகாலில் அடிபட்டால் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாலும் அது புற்று நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் நிறைய சொல்லலாம். நாம் சரி என்று நினைத்துக்கொண்டு தவறான வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இஞ்சி டீ நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாக குடிப்பது பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    நெஞ்செரிச்சலுக்கு நல்ல மருந்து என்றாலும் அளவுக்கு அதிகமான நுகர்வு நெஞ்செரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சு என்பார்கள். இஞ்சியும் அப்படியே..! ஆகவே நாம் உண்ணும் உணவு, அன்றாட வாழ்வியல் முறையை நாம் சரியாக பின்பற்றுகிறோமா என்று பார்க்க வேண்டியது அவசியம்.

    அழகுபடுத்திக்கொள்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கண்டதையும் வாங்கி முகத்தில் பூசிக்கொண்டால் என்னாகும்? ரசாயனங்கள் உடலில் படிந்து ஒருநாள் வீறுகொண்டு எழுந்து ஆளைக் கொல்லும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    -மரியபெல்சின்

    • புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும்.
    • புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்.

    மோகம் முப்பது நாள்..

    ஆசை அறுபது நாள் என்பார்கள்.

    அது ஏன்?

    திருமணம் பண்ணிப்பார்..

    தொண்ணூறு நாட்கள் வரை புது பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்.

    உலக அழகியே மனைவி என்றாலும்..

    உலகத்தின் ஆணழகனே புருஷன் என்றாலும்..

    ஒரு கட்டத்திற்குப் பிறகு தெவட்ட தான் செய்யும்.

    ஏனெனில் பழக பழக பாலும் புளித்து தயிர் ஆக தான் செய்யும்.

    புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால்

    தயிர் வெண்ணெய் ஆகி..

    இறுதியாக மணக்கும் நெய் ஆகும்.

    இதனால் காதல் குறைந்து விட்டதே என்று மனம் வருந்தாமல் அன்போடு நடந்து கொண்டால் நெய் போல தாம்பத்யம் மணக்கும்.

    புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும்.

    அதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டு போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே.

    புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்.. அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு.

    -பிரியங்கா

    • பெண் அறையில் பையன் பிடிபட்டால் உடனே கட்டாய கல்யாணம் தான்.
    • பெண் கர்ப்பமானாலும் உடனே கல்யாணம் தான்.

    பூடான் நாட்டில் இருக்கும் லவ் முறையே வேறு. அதை பொமினா (Bomena) என அழைப்பார்கள்.

    இந்த முறைப்படி முதலில் பையன் ஒரு பெண்ணுக்கு ரூட்டு விட வேண்டும். அவளும் கொஞ்சம் வெட்கபட்டு, சிக்னல் கொடுத்தால் போதும். பையன் பொமினாவுக்கு தயாராகிவிடுவான்.

    இரவில் பெண் தூங்கும் அறைக்குள் அவன் எப்படியோ சாமர்த்தியமாக நுழைய வேண்டும். பல சமயம் பெண்ணே வீட்டில் சொல்லி, அவளது அறைகதவை பூட்டாமல் இருப்பது, ஜன்னலை பூட்டாமல் வைத்திருப்பதும் எல்லாம் உண்டு. பெற்றோரும் பெண்ணுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என சொல்லி பொமினாவுக்கு ஒத்துழைப்பார்கள்.

    பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதும் உண்டு ஆக பையனின் திறமை இதில் இரவில் எப்படியாவது பெண்ணின் அறையில் நுழைவதுதான். உள்ளே போனால் ஒன்று அவள் அவன் காதலை ஏற்றுக்கொள்வாள். இல்லையெனில் "சும்மா நண்பன் மாதிரி நெனச்சு பேசினேன்.

    நீ பொமினான்னு தப்பு கணக்கு போட்டுட்டு வந்துட்டியே" என எதாவது டயலாக் சொல்வாள்.

    ஆனால் கத்தி ஊரை கூட்டுவது எல்லாம் கிடையாது. நோ சொன்னால் பையன் திரும்ப போயிடுவான். யெஸ் சொன்னால் அன்று தேன்நிலவுதான்.

    இப்படி தினமும் இரவு பையன் வருவதும் போவதுமாக இருப்பான். ஒரே கண்டிசன் காலையில் பெண் வீட்டார் விழிக்கையில் பையன் ரூமில் இருக்ககூடாது. பெண் அறையில் பையன் பிடிபட்டால் உடனே கட்டாய கல்யாணம் தான். பெண் கர்ப்பமானாலும் உடனே கல்யாணம் தான்.

    இதில் எல்லாமே ரகசியம் என்பதால் சாமர்த்தியமான வாலிபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொமினாவில் எல்லாம் இறங்குவது வழக்கம். ஆனால் பிடிபட்டால் கடுமையான அபராதம் விதிக்கபடும். குழந்தையை வளர்க்க காசு கொடுக்கணும். கிராமப்புற கட்டுபாடும் அதிகம்.

    20ம் நூற்றாண்டில் வெள்ளையர் வந்து இறங்கி, மேற்கத்தியமயம் சற்று பரவிய பின்னர் தான் இந்த வழக்கம் நின்றது.

    - நியாண்டர் செல்வன்

    • இலையுதிர் காலத்தில் தான் பெரும்பாலான பிள்ளைகள் பிறக்கின்றன.
    • மனித சமூகங்கள் கடும் கோடையிலும், கடும் குளிரிலும் பிள்ளைகள் பெற அனுமதிப்பதிப்பதில்லை.

    ஒவ்வொரு மிருகமும் கருதரிப்பதையும், பிள்ளை பெறுவதையும், பாலியலையும் சீசனை பொறுத்து தான் செய்யும். ஆண்டு முழுக்க பாலியலில் ஈடுபடுவது மனிதர்கள் தான் என ஒரு கருதுகோள் உண்டு

    ஆனால் அது அத்தனை சரியில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனித சமூகங்கள் கடும் கோடையிலும், கடும் குளிரிலும் பிள்ளைகள் பெற அனுமதிப்பதிப்பதில்லை. மிதமான தட்பவெப்பம் இருக்கும் இலையுதிர்காலத்தில் தான் பெரும்பாலான பிள்ளைகள் பிறக்கின்றன.

    இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதம் செப்டெம்பர். அமெரிக்காவிலும் செப்டெம்பர் தான் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதம். ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும் மாதமும் செப்டெம்பர்தான்.

    கோடையில் குறைந்த எண்ணிக்கையில் தான் பிள்ளைகள் பிறக்கின்றன எனவும் பல ஆய்வுகள் கூறுகின்றன.

    இதற்கான காரணங்களும் சரிவர தெரியவில்லை. நம்மை அறியாமல் நம்மை பூமியின் காலக்கணக்கு இயக்கி ஆதிக்கம் செலுத்துகிறது. பூமியின் பிள்ளைகள் தானே நாம்?

    -நியாண்டர் செல்வன்

    • ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும்.
    • வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.

    சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை அப்படியே பயன்படுத்தக் கூடாது. ஒரு இரும்புச் சட்டியில் போட்டு உப்பை நன்கு வறுக்க வேண்டும். அப்போது உப்பானது பட படவென்று வெடிக்கும். உப்பு இவ்வாறு வெடித்தால் அதில் கலந்துள்ள விஷத்தன்மை நீங்குகிறது என்று அர்த்தம். இப்படி வறுக்கப்பட்ட உப்பைத்தான் உணவுகளில் சேர்க்க வேண்டும்.

    உதாரணமாக இரண்டு புதிய இரும்பு சட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் வறுத்த உப்பையும், மற்றொரு சட்டியில் வறுக்காத உப்பையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் இரு சட்டிகளையும் அசையாமல் அப்படியே வைக்க வேண்டும். பிறகு இரண்டு சட்டிகளிலும் உள்ள உப்பை கீழே கொட்டி பார்த்தால் வறுத்த உப்பு இருந்த சட்டி புதிது போல் அப்படியே இருக்கும்.

    ஆனால் வறுக்காமல் போட்ட உப்பு இருந்த சட்டியின் அடியில் துருப்பிடித்து ஓட்டையாக இருக்கும். ஆடாமல் அசையாமல் அப்படியே இருக்கக் கூடிய இரும்பு சட்டியே துருப்பிடித்து ஒட்டையாக போய் விடுகிறது. நம் சிறுநீரகத்தில் ஏற்படும் விளைவுகளும் அதுவே.

    எனவே சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க உப்பை வறுத்து பயன்படுத்த வேண்டும். குப்பைமேனி இலை அல்லது முருங்கை இலை சேர்த்து வறுத்த உப்பு மிகவும் நல்லது.

    -செந்தில் குமார்

    • நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை.
    • ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன்.

    காமராஜரிடமிருந்து, பத்திரிகையாளர்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. என்னவோ ஏதோவென்று விரைந்து சென்று காமராஜரை சந்தித்தார்கள் பத்திரிகையாளர்கள்.

    காமராஜர் "ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் உங்களை கூப்பிட்டேன். உங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பாராட்டி எழுதி கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் என்னை பாராட்டி எழுதாதீர்கள்."

    இதைக்கேட்ட பத்திரிகையாளர்கள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து காமராஜர் சொன்னார்.


    "நான் நேர்மையோடு இருப்பது பெரிய விஷயம் இல்லை. ஏனென்றால் எனக்கு மனைவியோ குழந்தைகளோ, குடும்பமோ இல்லை. ஆகவே எனக்கு தேவைகளும் எதுவும் இல்லை. ஆனால் இந்த கக்கனை பாருங்கள். அவருக்கு குடும்பம் இருக்கிறது.

    மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர் நேர்மையோடு இருக்கிறாரே..! அதுதானே பெரிய விஷயம். அவரைத்தான் நாம் பாராட்ட வேண்டும். இனிமேல் என்னை பாராட்டி எழுதுவதைவிட கக்கனை பாராட்டி எழுதுங்கள்."

    காமராஜரின் இந்த பக்குவமான பேச்சைக் கேட்ட பத்திரிகையாளர்கள் பரவசமாகிப் போனார்கள்.

    ஆன்மீகத்தில் மட்டுமல்ல ; அரசியலிலும் அவ்வப்போது சில மகான்கள் அவதரிப்பது உண்டு. அப்படி ஒரு அவதாரம் எடுத்து நம்மிடையே வாழ்ந்தவர்தான் காமராஜர்.

    -அருள்பிரகாஷ்

    • சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா.
    • உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோவில்.

    பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?

    அந்தவகையில் அவ்வாறு பழமை வாய்ந்த சுவரோவியக்கோவில்கள் இதோ:

    காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில்.

    காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.

    திருப்பருத்திக்குன்றம் சந்திரப்பிரபா கோவில்.

    உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோவில்.

    செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்

    வீடூர் ஆதிநாதர் கோவில்.

    செஞ்சி வெங்கடரமணஸ்வாமி கோவில்.

    சித்தாமூர் பார்ஸ்வநாதர் கோவில்.

    பனைமலை தாளகிரீஸ்வரர் கோவில்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.

    திருமலை சமணக் கோவில்.


    திருக்கோவிலூர் திரிவிக்ரமப்பெருமாள் கோவில்.

    சிதம்பரம் நடராஜர் கோவில்.

    விருத்தாசலம் பழமலைநாதர் கோவில்.

    குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில்.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

    மதுரை மீனாட்சி கோவில்.

    அழகர்கோவில் சௌரிராஜப்பெருமாள் கோவில்.

    திருக்கோஷ்டியூர் சௌந்தரநாராயணப் பெருமாள் கோவில்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.


    மடவார்வளாகம் வைத்யநாதஸ்வாமி கோவில்.

    சித்தன்னவாசல் சமணக் கோவில்.

    குடுமியான்மலை குடுமிநாதர் கோவில்.

    நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில்.

    திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்.

    திருப்பெருந்துறை ஆவுடையார் கோவில்.

    கும்பகோணம் ராமஸ்வாமி கோவில்.

    முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம்.

    பட்டீஸ்வரம் பட்டீஸ்வரர் கோவில்.

    திருவலஞ்சுழி கோவில்.

    தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்.

    ஆடுதுறை ஆபத்சகாயஸ்வேரர் கோவில்..

    திருமங்கலங்குடி பிரணநாகேஸ்வரர் கோவில்.

    திருவையாறு ஐயாறப்பன் கோவில்.

    தஞ்சை பெரிய கோவில்.

    வேதாரண்யம் சிவன் கோவில்.

    மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோவில்.

    நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்.

    ராமநாதபுரம் ராமலிங்க விலாசம்.

    உத்தரகோசமங்கை மங்களேஸ்வர ஸ்வாமி கோவில்.

    குற்றாலம் குற்றாலநாதர் கோவில்.

    ஆழ்வார் திருநகரி ஆதிநாதஸ்வாமி கோவில்.

    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்.

    திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில்.

    திருப்புல்லாணி ஆதிஜகன்னாதர் கோவில்.

    வரகுணமங்கை பெருமாள் கோவில்.

    திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்.

    சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்.

    அதமன்கோட்டை சென்ராயன் கோவில்.

    மலையடிப்பட்டி பெருமாள் குடைவரைக்கோவில்.

    இடைக்கால் தியாகராஜர் கோவில்.

    கங்கைகொண்டசோழபுரம் கங்கை கொண்ட சோழீச்சுரம்.

    திட்டக்குடி சிவன் கோவில்.

    வேப்பத்தூர் பெருமாள் கோவில்.

    ×