என் மலர்
கதம்பம்
- சீனா உலகுக்குத் தந்த மற்றொரு பங்களிப்பு தேயிலை வளர்ப்பு ஆகும்.
- கி. பி. 15ஆம் நூற்றாண்டில் ஐராப்பாவில் அது மிகப் பரவலானது.
உலக நாகரிகத்திற்குப் பண்டைச் சீனர்கள் தந்த தொழில்நுட்பக் கொடைகள் பலவாகும். உலகு அவற்றைப் போற்றுகிறது.
கி.மு. 3000 ஆண்டளவிலேயே சீனத்தில் பட்டுத்துணி நெய்யும் தொழில் தோன்றிவிட்டதாம். பட்டுப்பூச்சியை வளர்க்கும் முறையையும் பட்டுநூலிழை செய்யும் தொழிலையும் சீனம் பல நூற்றாண்டுக் காலம் கமுக்கமாகப் பொத்திவைத்துக் காத்து வந்ததாம். பட்டுத்துணி ஏற்றுமதியை வைத்துத்தான் 'பட்டுப்பாதை' (Silk Road) தோன்றியது.
'பட்டுப்பாதை' எனும் சொல்வழக்கு கி. பி. 19ஆம் நூற்றாண்டில்தான் தோன்றினாலும், கி. மு. 114ஆம் ஆண்டளவிலேயே நடுஆசியாவை நோக்கிய அந்தப் பாதை தோன்றிவிட்டதாம். சீனர்கள் அதற்குப் பிறகு கண்டுபிடித்த எழுதுதாளும் வெடிமருந்தும் (Gun Powder) கூட இந்தப் பாதை வழியாகத்தான் மேலேயுலகுக்குச் சென்றனவாம்.
சீனத்தின் மேற்குப் பகுதியில்தான் பீங்கான் செய்யும் தொழில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. 'ஆன்' (Han) அரசக்குடியின் ஆட்சியின் போதுதான் பண்டைச் சீனத்தில் பீங்கான் தொழில் தோன்றியதாம். ஆயினும், 'டாங்' (Tang) அரசக்குடி ஆட்சியின்போதுதான் பீங்கான் 'பட்டுப்பாதை'யின் (Silk Road) ஊடாகப் பெருமளவில் ஏற்றுமதியானதாம்.
'சோங்' (Song கி. பி. 960-1279) அரசக்குடி ஆட்சிக்காலத்தில்தான் சீனக் குயவர்கள் ஒளியூடுருவும் வெண்ணிறப் பீங்கானை உருவாக்கும் கலையில் தேர்ச்சிப் பெற்றனராம். இக்காலத்துப் பீங்கான்தான் 'உண்மையான பீங்கான்' எனப்பட்டது.
சீனா உலகுக்குத் தந்த மற்றொரு பங்களிப்பு தேயிலை வளர்ப்பு ஆகும். தேநீர் அருந்தும் பழக்கம் சீனாவில்தான் தொடங்கியது. 'டாங்' (Tang) அரசக்குடி ஆட்சியின்கீழ்த் தேயிலைப் பண்பாடு செழித்தோங்கியது.
கி. பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சீனத்துப் பட்டு கடல்வழியில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை வந்தடைந்தாம். தமிழ் வாணிபர்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவுக்குப் பட்டை இறக்குமதி செய்திடினும், பட்டுத்துணி ஓர் ஆடம்பரப் பொருளாகவே கருதப்பட்டதால், இங்கு அஃது எழுதுப்பொருளாகவில்லை.
மூங்கில் மேலும் பட்டுத்துணியின் மேலும்தான் பண்டைச் சீனர்கள் முதலில் எழுதிவந்தனர். இந்நிலையில், முசுமுசுக்கை மரப்பட்டை, கந்தல்துணி முதலிய பொருட்களைக்கொண்டு எழுதுதாளைச் செய்ய கற்றது பண்டைச் சீனத்தில் பெரும்புரட்சியை ஏற்படுத்தியது.
'ஆன்' (Han கி.மு. 206- கி.பி 220) அரசக்குடி ஆட்சியின்கீழ்க் கி. பி. 105ஆம் ஆண்டிலேயே 'காய் லுன்' (Cai Lun) எனும் வழக்குமன்ற அதிகாரியால்தான் முதன்முதலில் 'எழுதுதாள்' (காகிதம்) செய்யப்பட்டதாம்.
எழுதுதாளைச் செய்ய கற்றதையடுத்து 'டாங்' (Tang கி. பி. 618-907) அரசக்குடி ஆட்சியின்போது சீனத்தில் அச்சுத் தொழிலும் முதன்முதலில் தோன்றியது. மரத்தாலான அச்சுக்கட்டையைக் (Wood-block) வைத்து எழுதுதாளின்மேல் முதலில் அச்சிடப்பட்டது. நூலின் ஒரு பக்கம் முழுவதையும் ஒரு மரக்கட்டையில் செதுக்கி அதன்மேல் மையைப் பூசி எழுதுதாளின்மேல் பதித்துத்தான் முதன்முதலில் நூல்கள் சீனமொழியில் அச்சேற்றப்பட்டன.
'சோங்' (Song கி. பி. 960-1279) அரசக்குடி ஆட்சிக்காலத்தில் தனித்தனி எழுத்துகளுக்கான தனித்தனி அச்சுக்கட்டைகளைக்கொண்டு அச்சிடுகின்ற முறை தோன்றியது. இந்த அச்சுமுறையால் அறிவுநூல்களைப் பதிப்பித்து பரப்பும் வாய்ப்பு சீனத்திற்குக் கிட்டியது.
எழுதுதாள் (காகிதம்) செய்யும் தொழில்நுட்பம் கி. பி. 8ஆம் நூற்றாண்டில் - குறிப்பாக கி. பி. 751ஆம் ஆண்டில் 'தலாசு' போரின் (Battle of Talas) போதுதான் - எழுதுதாள் செய்ய வல்ல சீனர்கள் பிடிபட்ட பிறகுதான் - இசுலாமிய நாடுகளுக்கு எழுதுதாள் அறிமுகமானதாம். சில நூற்றாண்டுகளின் ஊடே அது படிப்படியாக ஐரோப்பாவுக்குப் பரவியதாம். முதல் எழுதுதாள் ஆலைகள் கி. பி. 11ஆம் நூற்றாண்டில் இசுபெயினில் நிறுவப்பட்டன. கி. பி. 13ஆம் நூற்றாண்டில் எழுதுதாள் செய்யும் தொழில் இத்தாலி முதலிய ஐரோப்பியப் பகுதிகளுக்கு பரவி, கி. பி. 15ஆம் நூற்றாண்டில் ஐராப்பாவில் அது மிகப் பரவலானது.
-தமிழறிஞர் குணா
- நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை.
- பக்தி உள்ளவர்களுக்கு துன்பத்தை தாக்குப்பிடிக்கும் சக்தியை இறைவன் கொடுப்பார்.
நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?
நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத் துன்பமும் ஏற்படாது என்பது செய்தி.
இதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் அருணகிரியாரின் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது.
"நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே"
நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாதுஎன்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார்.
சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?
பார்க்க வேண்டும்..
நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!
பக்தி உள்ளவர்களுக்கு துன்பத்தை தாக்குப்பிடிக்கும் சக்தியை இறைவன் கொடுப்பார்!
எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள் கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள் என்கிறோம். அவர்களுக்கு தான் மேற்கண்ட வாசகம் பொருந்தும்.
திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து அதில் செய்கிறார்கள்.
ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான் முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.
எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமையில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.
ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.
ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும் செய்ய மாட்டார்கள்.
திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்தவீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல் போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன. அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.
சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?
சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடவேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச் செல்ல வேண்டியதுதான்.
தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால், ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று மாதங்களுக்கும் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!
அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.
-மாலதி ஜெயராமன்
- ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும்.
- வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.
வல்லநாடுச் சித்தர் சாதுசிதம்பரம் சுவாமிகள் அருளிய பரிகார விவரங்கள் :
ஒவ்வொரு மாதமும் வரும் நம் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும்.
நமது ஜென்ம-நட்சத்திரம் என்பது நம் கர்மாவின் குறிகாட்டியாகும். உண்மையில் நம் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிபனும் நமக்கு பிறப்பெனும் துன்பத்தையே உணர்த்துகிறார்கள்.
கடந்த பிறவியில் எந்த நட்சத்திரத்தில், எத்தனையாவது பாகையில் உயிரை விட்டோமோ அதே நட்சத்திரத்தில் அந்த பாகையில் மீண்டும் பிறக்கிறோம்.
எனவேதான் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.
அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.
ஜோதிட ரீதியாக கிரக பலன்களை வைத்துப் பரிகாரங்கள் சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு மாதமும் வரும் நம் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று நம் நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகத்திற்கு அபிசேக, ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து வழிபட்டால் தடைகள் யாவும் நிவர்த்தியாகும்.
நம்பிக்கையோடும், முனைப்போடும் கடைபிடிப்பவர்கள் நல்வாழ்வு பெறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
நட்சத்திரம் -கிரகஅதிபதி
அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்
-மோகன் கிருஷ்ணமூர்த்தி
- பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.
- உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.
*மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து..!
* பித்தத்தைப் போக்கும்....!
* உடலுக்குத் தெம்பூட்டும்....!
* இதயத்திற்கு நல்லது....!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்...!
* கல்லீரலுக்கும் ஏற்றது...!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்...!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்...!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்..!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்...!
*இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்..!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது...!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள 'பப்பாயின்' என்சைம்களில் 'ஆர்ஜினைன்' என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,'கார்பின்' இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது....!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது...!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது...!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் 'பட்டினிச் சிகிச்சை' மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்....!
* 'ஆண்டிபயாடிக்' மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்....!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். !
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும்.
மேலும்- நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
- பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம்.
- அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள்.
1,2,3,4,5,6,7,8,9 என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள்.. ' 0 ' அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த் தான் முடிகிறது.
பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம்.
ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10.
பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது.
பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].
அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன்.
யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள்.
இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்.
-வேதாத்திரி மகரிஷி
- நம் பொருளாதார நிலை என்ன என்பது பிரச்சனையே இல்லை.
- தெரு ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஒரு பகுதியை கடை ஒன்றுக்கு வாடகைக்கு விடுவார்கள்.
ஒரு குடும்பத்துக்கு ஏழு வகையிலான வருமானம் வரவேண்டும் என பயர் (FIRE- Financial Independece Retire Early) வட்டங்களில் சொல்கிறார்கள்
நம் பொருளாதார நிலை என்ன என்பது பிரச்சனையே இல்லை. ஒவ்வொரு படியாக மேலே எறிக்கொண்டே, வருமானம் வரும் வழிகளை அதிகரித்துக்கொண்டே போகவேன்டும். என் இளவயதில் எங்க ஊரில் பல குடும்பங்களுக்கு பல வழிகளில் பணம் வரும். பெண்கள் மதியம் உணவுக்கு பின் சேர்களுக்கு பிளாஸ்டிக் நாரை போட்டு பணம் வாங்குவார்கள். வீட்டை வாடகைக்கு விட்டு பணம் வரும், நிலத்தை குத்தகைக்கு விட்டு இருப்பார்கள். பால், முட்டை விற்பார்கள். தெரு ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஒரு பகுதியை கடை ஒன்றுக்கு வாடகைக்கு விடுவார்கள்.
ஆக இதன் நவீன வடிவம் தான் இந்த ஏழு வகை வருமானம் என்பது. முதல் வருமானம் சம்பளம். இரண்டுபேர் வேலைக்கு போகும் வீடுகள் பெருகிவிட்டன. இதனால் இரண்டு சம்பளம் வாங்கும் வீடுகள் நிறைய உள்ளது. இதிலும் கணவன் வேறு கம்பனி, மனைவி வேறு கம்பனி என இருந்தால் ஒருவருக்கு வேலை இழப்பு வந்தாலும், இன்னொருவர் சம்பளம் கைகொடுக்கும் என்கிறார்கள். ஆக இதில் இரண்டு வருமானம் ஆச்சு
இரண்டு சம்பளம் வரும் வீடுகளில், குறைவான சம்பளத்தை சேமித்துவிட்டு, பெரிய சம்பளத்தில் செலவுகளை மெய்ன்டெய்ன் செய்யவேண்டும் என்பது ஒரு உத்தி. நாள்பட, நாள்பட சிக்கனம் கூடி, பெரிய சம்பளத்தை சேமித்துவிட்டு, சின்ன சம்பளத்தில் குடும்பம் நடத்தவேண்டும் என்பது இன்னொரு லட்சியம்.
இப்படி வரும் பணத்தை பங்குகளில் முதலீடு செய்தால் மூன்றாம் வருமானம் பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் வரும் வருமானம். பங்கு ஈவு (டிவிடண்ட்) அல்லது பங்கு விலை ஏற்றம் மூலம் வரும் வருமானம்.
பங்குச்சந்தையில் நிறைய பணம் சேர்ந்துவிட்டால், அதை எடுத்து நிலம் அல்லது வீடு வாங்கலாம். அதை வாடகைக்கு விடலாம். இது நாலாவது வருமானம். இது தான் ஒருவரை தலைமுறை பணக்காரன் ஆக்கும் முதலீடு. எங்கோ மலிவாக கிடைக்கிறது என இடத்தை வாங்கிபோட்டால், 10- 20 வருடங்களில் அதன் மதிப்பு எங்கோ போய்விடும். இது நாலாவது வருமானம்.
வீட்டு வாடகையை எடுத்து, வீட்டு கடன் வாங்கி இன்னும் ஒரு வீடு வாங்கலாம். மெதுவாக ரியல் எஸ்டேட் வணிகத்தில் கால் வைப்பது போல் வீடுகள், அபர்ட்மெண்ட்களை வாடகைக்கு விடும் தொழிலில் இறங்கலாம். இது ஐந்தாவது வருமானம். ஒரு எல்லைக்கு மேல் நாம் சம்பாதிப்பதை விட நம் பணமே அதிக சம்பாத்தியம் ஈட்டும்.
ஆறாவதாக நம் பொழுதுபோக்குகள் மூலம் ஈட்டும் வருமானம். உங்களுக்கு ஓவியம் வரைய தெரியுமா? அதை சோசியல் மீடியா மூலம் சந்தைப்படுத்தி சின்னதாக ஒரு பிசினஸ் துவக்கலாம். நல்லா சமைக்க தெரியுமா? மாலை வேளைகளில் அதை பிசினசாக ஆரம்பிக்கலாம். சில சமயம் இதுவே பிக்கப் ஆகி, வேலையை எல்லாம் விட்டுவிட்டு முழுநேர தொழிலாக செய்யும்படிக்கு ஆகிவிடும். பலரும் ரீல்ஸ், யுடியூபில் வருமானம் ஈட்டுகிறார்கள்., இது ஆறாம் வருமானம்.
பங்குகள், முதலீடுகள் போக வேறு வகைகளில் பணத்தை முதலீடு செய்யலாம் என்கிறார்கள். பிரைவேட் லெண்டிங் என சொல்லி கம்பனிகளுக்கு கடன் கொடுக்கலாம். வங்கிகடனை கட்ட முடியாமல் திவால் ஆகிறவர்களின் வீடுகளை மலிவான விலையில் ஏலத்தில் எடுத்து, ரிப்பேர் செய்து விற்று காசு பார்ப்பவர்கள் உண்டு. இது ஏழாம் வகை வருமானம்.
ஒற்றை ஆள் சம்பளத்தில் ஆரம்பித்து கடைசியில் பெரிய பிசினஸ் பிஸ்தாக்கள் ஆக சொல்கிறார்கள். தற்போது நாம் எந்த எந்த வருமான லெவலில் இருந்தாலும், மெதுவாக ஒவ்வொரு படியாக முன்னேறிக்கொண்டே செல்லலாமாம்.
- நியாண்டர் செல்வன்
- பேச்சு வழக்கில் எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் கலந்தன.
- எண்களை யாரும் தமிழில் சொல்வதில்லை.
தமிழுக்கு எதிராக நிகழ்ந்துவிட்ட தீமைகள் அனைத்தும் எங்கிருந்து தொடங்கின ? ஆங்கிலத்தை நாம் இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டதிலிருந்து தொடங்கின.
ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டதால் தமிழுக்கு எதிராக என்னென்ன தீமைகள் காலப்போக்கில் நேர்ந்தன ?
1. பேச்சு வழக்கில் எண்ணற்ற ஆங்கிலச் சொற்கள் கலந்தன. பத்துக்குப் பத்தும் தமிழாகப் பேசிய பழக்கம் மறைந்து பத்துக்கு ஒன்றிரண்டு சொற்கள் ஆங்கிலமாய்க் கலந்தன. தற்காலத்தில் பத்துக்கு ஐந்து என்ற சரிகலப்பாக ஆங்கிலம் கலந்துள்ளது. தண்ணீர், சோறு கூட மறைந்து எங்கெங்கும் வாட்டர், ரைஸ் (புட்) தான்.
2. வட்டார வழக்கிற்கேயுரிய தூய மொழித்தன்மைகள் அழிந்து அவற்றிலும் ஆங்கிலச் சொற்கள் நுழைந்தன. ஊர்ப்புறத்தாரிடையே பேசும் பேச்சிலும் ஆங்கிலச் சொற்கள்.
3. தற்காலத் தமிழர்களிடையே எழுதும் செயல் முழுவதும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. அஞ்சலட்டையில், மடல்களில், அஞ்சல் பொட்டணங்களில் எழுதவேண்டிய முகவரியைக்கூட யாரும் தமிழில் எழுதுவதில்லை.
4. கணக்கெடுப்பதற்காகவோ / வேறு எதற்காகவோ ஒருவரின் பெயர் கேட்டு எழுதுகின்ற சிறுசெயல்களில்கூட ஆங்கிலத்தில்தான் எழுதுகின்றனர். தமிழில் எழுதுவதில்லை.
5. வணிகப் பெயர்ப் பலகைகள், அறிவிப்புச் சொற்கள் என எங்கெங்கும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. அங்கே கட்டாயமாக இருக்கவேண்டிய தமிழைக் காணவில்லை. பதிவு முறைகள், சுருக்கச் சொற்கள், திட்டங்களின் பெயர்கள் என எங்கெங்கும் ஆங்கிலம்.
6. எண்களை யாரும் தமிழில் சொல்வதில்லை. எல்லாருமே ஆங்கிலத்தில்தான் கூறுகின்றனர். எண்களைத் தமிழ் எழுத்தால் எழுதும் பழக்கம் அழிந்துவிட்டது. முப்பத்து ஆறாவது வட்டம் என்று எழுதுவதற்கு யார்க்கும் (எழுத்தாளர்கள் உட்பட) துணிவில்லை. 36 என்ற எண்ணைத்தான் எழுதுவார்கள்.
7. ஆங்கிலச் சொற்கள் கலந்து பேசுவதுதான் பெருமை என்ற மயக்கம் ஏற்பட்ட பிறகு அனைத்துத் தரப்பினரின் பேச்சு வழக்கில் தமிழ்ச்சொற்கள் அனைத்தும் ஆங்கிலமாகிவிட்டன - மார்னிங் வரேன், கரெக்டாச் சொல்லு, இப்ப டைம் என்ன, ஒரு பிராப்ளம், சிக்கன் மட்டன், ஆனியன்.
8. எங்கும் ஆங்கிலம் எல்லாம் ஆங்கிலம் என்றானதால், தமிழ்வழிக் கல்வியைவிடவும் ஆங்கிலம் கற்றால்தான் ஆயிற்று என்னும் சூழ்நிலையை மக்கள் பார்ப்பதால் - தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழிக் கல்விக்குத்தான் அனுப்ப விரும்புகின்றனர். தனியார் பள்ளிகளில் குவிகின்றனர். அந்தச் சந்தையை உள்ளூர் வணிகர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர்.
9. ஆங்கிலத்தில்தான் கல்வியும் அமைந்துவிட்டதே, ஓரளவு ஆங்கிலம் புரிகிறதே என்றான பிறகு தமிழில் கல்வித்துறைகள், அறிவுத்துறை இயல்கள் வரவேற்பிழந்தன. ஆளில்லாத கூடாரங்கள் ஆயின. தமிழ்மாநிலத்தில் தமிழ்வழிக் கல்விக்கூடங்கள் ஆளின்றித் தத்தளிக்கின்றன. மொழியரசுக்கு வேண்டிய மொழிசார் அறிவுரைகள், பரிந்துரைகளை வழங்கும் தகுதியில் இன்று யார் உள்ளனர் ? எல்லாரும் ஆங்கிலத்தையும் படித்துக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறோம். நமக்குத் தமிழென்ன, ஆங்கிலமென்ன... இரண்டும் ஒன்று என்கின்ற மனநிலைக்கு வந்துவிட்டோமா ?
10. இந்தத் தேக்கத்தினால் தமிழில் வந்திருக்கவேண்டிய அறிவுத்துறைத் தமிழாக்கங்கள் எவையும் வரவில்லை. அல்லது மிகக்குறைவாகவே வருகின்றன. அவையும் தனிப்பட்டாரின் ஆர்வத்தினால் விளைந்திருக்கலாம். தமிழ்ச்சொல்லாக்கங்கள் நிகழவில்லை. பிறநாட்டு அறிவியல் பேரியல்கள் தமிழ்மொழிக்கு வரவேயில்லை. இத்தனைக்கும் அத்துறைகளில் தமிழர்களும் இடம்பெற்றுள்ளனர். வாழ்வாங்கு வாழ்கின்றனர். ஆனால், அவர்களுடைய தாய்மொழியறிவு வீட்டுப் பேச்சோடு நின்றது. எளிய முறை எழுத்தறிவோடு நின்றது. தமிழ் மொழிக்கல்வியோ புலமையோ போதவில்லை. ஆர்வம் உண்டு, உணர்வு உண்டு, அடுத்து ஆற்றவேண்டியது என்ன, தெரியவில்லை.
ஆங்கிலத்தை ஏற்றுக் கற்றதால் முன்னேறி வாழ்கிறோம், மேம்படுகிறோம், உலகம் சுற்றுகிறோம் - உண்மைதான். ஆனால், உலகின் எல்லாத் திக்குகளிலும் வாழ்க்கை ஒன்றே போலத்தான் இருக்கிறது. பஞ்சு மெத்தை இருக்கைகளும் பத்து அறைகளும் கொண்ட மாடவீடுகள் மகிழுந்துகள் நமக்கு நிறைவு தந்துவிட்டனவா? மொழியின் ஆணிவேர் அறுந்த சல்லிவேர்ச் சொற்களைக்கொண்டு வாழ்வதே மீத வாழ்க்கை என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமா?
அப்படித்தான் ஆங்கிலம் கற்றோமே, நமக்கு ஆங்கிலத்தில் அனைத்தும் கைவந்துவிட்டனவா? சேக்சுபியரைப் படித்துப் புரிந்துகொள்ள முடிகிறதா? நம்மிடையே நூல் எழுதும் ஆங்கில ஆசிரியர், மாணாக்கர் தோன்றிவிட்டாரா ? அவ்வாறு எழுதினாலும் அவற்றை ஆங்கிலப் புலத்தார் மதிக்கிறார்களா?
மொழி மக்களாக நாம் தமிழில் ஏதேனும் செய்யவேண்டுமா? ஆங்கிலத்தில் ஏதேனும் செய்யவேண்டுமா? அல்லது இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய தாழ்வினில் நிற்கிறோமா?
இந்தப் போக்கு தொடக்கத்தில் பெரும்போக்காகவில்லை. வெறும் முப்பது அல்லது நாற்பதாண்டுகட்கு முன்னர் பரவத் தொடங்கியது. ஆங்கிலத்தை மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்ட பின்பு தமிழ்க்குமுகாயம் அடைந்துள்ள இன்றைய நிலை பாரீர் !
ஆங்கிலத்தை (வேண்டா வெறுப்பாகவே இருக்கட்டும்) இரண்டாம் மொழியாக ஏற்றுக்கொண்டது என்னவோ உண்மைதான், ஆனால் மெய் சொல்லுங்கள், அந்த ஆங்கிலம் இன்று நடைமுறையில் முதன்மொழியின் இடத்தைப் பிடித்துவிட்டதா இல்லையா ?
-கவிஞர் மகுடேசுவரன்
- பறவைகள் அதிகப்படியான சக்தியை செலவு செய்றது பறக்கிறதுக்கு தான்.
- பல தலைமுறைகள் கடக்கும் போது, இறகின் அமைப்பு பறக்கிற தன்மையை இழந்துட்டே வரும்.
பறவைகள்ன்னு சொல்றதால மட்டுமே அதெல்லாம் பறக்கும்ன்னு அர்த்தம் இல்ல. பறத்தலை கைவிட்ட சில வகையினங்களும் பறவைகள்ன்னு தான் இங்க வரையறுக்கப்படுது."
ஈமு, கேசவரி, நெருப்புக் கோழி மாதிரியான உயிரினங்கள் எல்லாம் பறவைகள்ன்னு தான் சொல்றாங்க. ஆனா அவை எதுவும் பறக்குறதில்லையே. எப்படி ?
அவையும் ஒரு கால கட்டம் வரைக்கும் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகளாகத் தான் இருந்திருக்கும். ஆனா, குறிப்பிட்ட கால கட்டத்தில் அதன் ஒரு பகுதி ஏதாவது தீவுல வந்திறங்கி இருக்கும்.
பறவைகள் அதிகப்படியான சக்தியை செலவு செய்றது பறக்கிறதுக்கு தான். அதனால தான் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்கிற பறவைகள் எல்லாம் காற்றோட ஓட்டத்தை பயன்படுத்தி பெருமளவு சக்தி விரயம் இல்லாம சக்தியை சேமிச்சுக்கற விதமா பயணிக்கின்றன. அதே போல குறிப்பிட்ட தீவில் இறங்கிய பறவை கூட்டத்துக்கு அங்க எதிரிகள் - அதாவது அவங்களை வேட்டையாடுற/உண்ணும் ஆட்கள் - இல்லாதபட்சம் படிப்படியாக பறப்பதை கைவிட்டு நடக்க ஆரம்பிக்கும்.
அவ்வாறு, பல தலைமுறைகள் கடக்கும் போது, இறகின் அமைப்பு பறக்கிற தன்மையை இழந்துட்டே வரும். கால்கள் நடப்பதற்கு ஏற்ற மாதிரி பரிணமிக்கும். பறக்காத பறவைகளோட இறக்கை மற்றும் இறகு அமைப்பு வச்சு அது எவ்வளவு காலம் முன்னாடியே பறத்தலை கைவிட்டிருக்கும்னு நாம புரிஞ்சுக்கலாம்.
-லிங்கம் தேவா
- நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம்.
- நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு.
கருப்பையில் இருக்கும் குழந்தை "ஓம்" வடிவில்தான் உள்ளது என்பதே, "ஓம்" என்ற மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்..
தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று உள்ளது. ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் அதில் இருக்கும். அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே இருக்கிறது.
இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகிவிட்டால் உயிர் போய்விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.
நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம்.
நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை.
ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு. கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்புளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.
தொப்புளில் "ஓ" என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு.
இப்படி உயிராகிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெடுத்து மேலெழும்பி வருவதே "ஓம்" எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படுவதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.
- பிரபஞ்சத்தில் உயிர்வாழும் நிலம்தான் பூமி.
- உடல் நல பிரச்சனைக்கு தேவையான மூலிகை மருந்து செடிகளையும் படைத்திருக்கும்.
பெண்ணின் கருமுட்டை நிலவு.
ஆணின் உயிரணு சூரியன்.
நிலாவும் சூரியனும் இருக்கும் இடத்தில்தான் உயிர் உருவாகும்.
ஒவ்வொரு குழந்தையும் குட்டி பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தின் நகல்தான் குழந்தைகள்.
பிரபஞ்சத்தில் உயிர்வாழும் நிலம்தான் பூமி. குழந்தையின் நிலம்தான் வயிறு.
அக்குழந்தை எங்கு பிறக்கிறதோ, எங்கு வளர்கிறதோ அந்த நிலத்தில் விளையும் உணவு பொருட்கள்தான் அக்குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும். வடநாட்டவர்க்கு அரிசி ஜீரணமாகாது. தமிழ் நாட்டவர்க்கு கோதுமை ஜீரணம்ஆகாது. வேறு இடத்தில் விளைந்த உணவை அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் அமிலம் அதிகம் உண்டாகும்.
குழந்தை எங்கு பிறக்கிறதோ அது சார்ந்த இடத்திலே உணவை பிரபஞ்சம் படைத்திருக்கும். கூடவே அக்குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் நல பிரச்சனைக்கு தேவையான மூலிகை மருந்து செடிகளையும் படைத்திருக்கும்.
-ரியாஸ்
- நல்லது கெட்டது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்போது சந்தோஷமே.
- சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது.
ஒரு மங்கோலியனிடம் ஒரு குதிரை இருந்தது. அது ஒருநாள் மலைக்காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. இதைக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரன் அனுதாபப்பட்டு சொன்னான்.
"இது உனக்கு போதாத காலம் போலிருக்கிறது" என்று.
அதைக் கேட்டு கலங்காத மங்கோலியன் சொன்னான், "விடு! எல்லாம் நன்மைக்கே"
சிலநாட்கள் சென்றதும் ஓடிப்போன குதிரை திரும்ப வந்தது. அது தனியாக வராமல் கூடவே காட்டிலிருந்து ஐந்து குதிரைகளையும் அழைத்து வந்திருந்தது. அன்று முதல் மங்கோலியன் ஆறு குதிரைகளுக்குச் சொந்தக்காரன் ஆனான்.
இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரன் வந்து சொன்னான், உனக்கு அதிர்ஷ்டம் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று. இதைக் கேட்டு மங்கோலியன் சந்தோஷமாய் சொன்னான். "எல்லாம் நன்மைக்கே".
மறுநாள் காட்டுக் குதிரை ஒன்றின்மேல் மங்கோலியனின் மகன் சவாரி செய்ய ஏறினான். குதிரை அவனை கீழே தள்ளி விட்டது. கீழே விழுந்தவன் கால் உடைந்து படுத்த படுக்கையானான், அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து அனுதாபத்துடன் கூறினான். உனக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது என்று.
அதைக் கேட்டு கலங்காமல் மங்கோலியன் சொன்னான் 'எல்லாம் நன்மைக்கே' என்று புன்னகைத்தான்.
இதைக் கேட்டதும் அண்டை வீட்டுக்காரனுக்கு எரிச்சலானது. "எதற்கெடுத்தாலும் எல்லாம் நன்மைக்கே என்கிறாயே, கால் உடைந்து உன் மகன் கிடப்பது உனக்கு நன்மையா? இது ஒரு கெடுதல் என்று உனக்குத் தெரியவில்லை?" என்று கத்தினான். அதற்கும் அமைதியாக மங்கோலியன் 'எல்லாம் நன்மைக்கே' என்றான்.
சில நாட்கள் கடந்த நிலையில் அந்த நாட்டு அரசன், தனது படைக்கு ஆள் திரட்டுவதற்காக அந்த கிராமத்துக்கு வந்தான். இளைஞர்களையும், பையன்களையும் பட்டாளத்தில் சேர்ப்பதற்காக வலுக்கட்டாயமாக பிடித்துப் போனார்கள்.
அந்த கிராமத்தில் எல்லா வாலிபர்களும் இழுத்துச் செல்லப்பட மங்கோலியன் மகன் மட்டும் வீட்டில் இருந்தான். அதாவது கால் உடைந்து கிடந்ததால் அரசன் அவனை படைக்கு லாயக்கற்றவன் என்று விட்டு விட்டான். அப்போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து கேட்டான், இதுதான் எல்லாம் நன்மைக்கா!"
எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் கலக்கம் குழப்பம் வராது. நல்லது கெட்டது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்போது சந்தோஷமே.
-சபீதா ஜோசப்
- புனேவின் ஏலச்சீட்டுகடைகாரர் ஒருவருக்கு தான் கிடைத்தது.
- தங்கசட்டையை கொள்ளையடிக்க ஒரு கேங் திட்டமிட்டது.
2013.. ஒட்டுமொத்த இந்தியாவையும், ஏன் உலகையுமே அதிரவைத்த சம்பவம் புனேவில் நடந்தது.
"உலகின் மிக விலை உயர்ந்த சட்டையை அணிபவர்" என கின்னஸ் புத்தகம் புனேவின் தத்தா புகே என்பவரை அறிவித்தது.
ப்ரூனே சுல்தான், அம்பானி, டாட்டா, பிர்லா என பலர் இருக்க இது யார் தத்தா புகே? அது என்ன உலகின் விலை உயர்ந்த சட்டை என அனைவரும் குழம்பினார்கள்.
தத்தா புகே புனேவில் சீட்டு கம்பனி நடத்திவந்தவர். தங்க நகைகள் மேல் ஆர்வம் அதிகம். நடமாடும் நகைக்கடை மாதிரி உடல்முழுக்க நகைகளை அணிந்து பவனிவந்தார். ஒரு நாள் "முழுக்க தங்கத்திலேயே சட்டை செய்துபோட்டுக்கொண்டால் என்ன?" என தோன்றியது.
புனேவின் நகை வணிகர்களை அணுக, வங்காளத்தில் இருந்து பதினாறு பொற்கொல்லர்களை வரவழைத்தார்கள். அவர்களும் சுமார் 3.2 கிலோ தங்கத்தில் சுமார் இரண்டரை கோடி ரூபாயில் தங்க சட்டையை தயாரித்து கொடுத்துவிட்டார்கள். இவரும் கின்னஸில் இடம்பிடித்துவிட்டார். (அதன்பின் 2014ல் பங்கஜ் பரேக் என்பவர் அதைவிட விலைமதிப்புள்ள தங்க சட்டையை தயாரித்து அணிந்து கின்னஸில் இவரது சாதனையை முறியடித்துவிட்டார்)
உலக வரலாற்றில் எத்தனையோ மன்னர்கள், சக்ரவர்த்திகள் இருந்தும் யாருக்கும் தங்க சட்டையை அணியும் பாக்கியம் இதுவரை கிடைத்ததில்லை. புனேவின் ஏலச்சீட்டுகடைகாரர் ஒருவருக்கு தான் கிடைத்தது. அத்தனை மதிப்புள்ள சட்டையை அணிந்து கொண்டு கல்யாணங்கள், விசேசங்களுக்கு போய் வந்தார். சுற்றிலும் பாதுகாப்புக்கு 20 பாடிகாட்டுகள்.
இந்த தங்கசட்டையை கொள்ளையடிக்க ஒரு கேங் திட்டமிட்டது. அதுல் என்பவன் நம்ம தங்கசட்டைகாரரின் மகனுக்கு நண்பன் ஆனான். வீட்டில் எல்லாம் போய் நெருங்கி பழகினான். "என் பிறந்தநாள் கொண்டாடணும். அப்பாவை தங்க சட்டையை போட்டுக்கொண்டு வர சொல்லு" என ரிக்வெஸ்ட் வைத்தான்.
அதன்பின் "அது சின்ன அபார்ட்மெண்ட். அங்கே 20 பாடிகாட்டுகள் எல்லாம் வந்தால் தாங்காது. பாடிகாட்டுகள் இல்லாமல் வரசொல். பாதுகாப்புக்கு நான் காரண்டி" என்றான் அதுல். அதன்பின் பார்ட்டிக்கு இருவரும் போக, மகனிடம் "நீ இவனுடன் போய் 20 பிரியாணி வாங்கிட்டு வா" என நைசாக பேசி அனுப்பினான்.
மகன் சென்றவுடன், பார்ட்டியில் இருந்த மீதமுள்ள 12 பேரும் கேன்க்ஸ்டர்கள். அவர்கள் சேர்ந்து நம்ம தஙக்சட்டைகாரரை அடித்து துவைத்தார்கள். அதன்பின் மேலே அணிந்திருந்த சாதாரண சட்டையை விலக்கிபார்த்தால் உள்ளே தங்க சட்டை இல்லை. ஆபிஸில் இருந்து நேராக வந்ததால் தங்க சட்டை இல்லாமல் வந்திருக்கிறார்..
இத்தனை கஷ்டபட்டு திட்டம் போட்டு எல்லாம் வீணாகபோய்விட்டது என அவரை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க, மகன் வந்து பதறி அவரை மருத்துவமனையில் சேர்க்க, அங்கே அவரது உயிர் பிரிந்துவிட்டது.
ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சும்மாவா சொன்னார்?
- நியாண்டர் செல்வன்






