search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருச்சி விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை
    X

    திருச்சி விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக சோதனை

    ரூ.2 கோடி பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக திருச்சியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #ITRaids
    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பறக்கும் படை அதிகாரிகள் 24 மணி நேரமும் வாகன சோதனை உள்ளிட்ட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூருக்கு கட்டுக்கட்டாக ரூ.5 கோடி பணம் காரில் கடத்தப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டீபன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் பெரம்பலூர்- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகில் வந்த அந்த காரை நிறுத்தி சோதனை போட்டனர்.

    அப்போது கார் கதவுகளின் உள்பகுதியிலும், கார் சீட்டின் இருக்கையிலும் ரூ.2.10 கோடி பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொண்டு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருச்சி தங்கதுரை, பிரபாகரன், திண்டுக்கல் தங்கம், சென்னை கே.கே.நகர் கார் டிரைவர் லாரன்ஸ் கிளைவ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மன்னார்புரத்தில் எல்பின் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர்களும், விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர்களுமான ராஜா, ரமேஷ் குமார் ஆகியோர் மூலம் இந்த பணம் திருச்சியில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.


    இதைத்தொடர்ந்து ரூ.2 கோடி பணத்திற்கான ஆவணங்கள் அந்த அலுவலகத்தில் உள்ளதா? அந்த நிறுவனம் வருமானம் எதன் மூலம் ஈட்டுகிறது. முறையாக வருமான வரி தாக்கல் செய்துள்ளார்களா? என நேற்று திருச்சி வருமான வரித்துறை உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மன்னார்புரத்தில் உள்ள அந்த நிறுவனத்திற்கு சென்று காலை 10 மணி முதல் சோதனை செய்தனர்.

    அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், ரசீதுகள், வருவாய் செலவு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தில் வேறு எங்காவது பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தினர். அனைத்து அறைகள், கழிவறைகள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், குடோன் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இரவு நீண்ட நேரமாகியும் சோதனை முடியாததால் இரவு அந்த நிறுவனத்திலேயே தங்கிய அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். 2-வது நாளாக சோதனை நடத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.2 கோடி பணம் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

    தொடர்ந்து ரூ.2 கோடி பணம் யார் மூலம் எப்படி கடத்தி கொண்டு செல்லப்பட்டது என்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக நிறுவன தொழிலதிபர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். #LokSabhaElections2019 #ITRaids
    Next Story
    ×