search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.3.10 கோடி பறிமுதல்
    X

    திண்டுக்கல் அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.3.10 கோடி பறிமுதல்

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.3.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 74 ஆயிரத்து 717 பெண் வாக்காளர்களும் 152 இதரர் என மொத்தம் 15 லட்சத்து 18 ஆயிரத்து 385 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    இதே போல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 508 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 204 பெண்கள், இதரர் 4 என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 716 வாக்காளர்கள் உள்ளனர்.

    மாவட்டத்தில் இது வரையில் 13 ஆயிரத்து 620 மாற்று திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பறக்கும்படைகள், 8 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 34 குழுக்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இக்குழுக்கள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு ரூ. 52 லட்சத்து 81 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு குழுக்களால் பணமோ, பொருளோ கைப்பற்றப்பட்டதில் ஆட்சேபணை இருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

    வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மீறல் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கலாம். இதில் புகார் அளிப்பவர் தனது பெயர் விபரங்களை விரும்பினால் அளிக்கலாம். இல்லையென்றாலும் புகார் பதிவு செய்து கொள்ள இந்த செயலியில் வசதி உள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு 1,829 வாக்குச்சாவடிகளும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 265 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மாற்று திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls

    Next Story
    ×