search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
    X

    தேர்தலுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

    சித்திரை திருவிழா உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட 3 மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #LSPolls #HighCourt
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால், மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி பார்த்தசாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.



    இதேபோல் தேர்தல் நாளில் பெரிய வியாழன் பண்டிகை என்பதால், கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற வேண்டும் என பிஷப் கவுன்சில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் புனித வாரம் வருவதால் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி மற்றொரு கிறிஸ்தவ அமைப்பும் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இவ்வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்திரை திருவிழாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம், இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டித்திருப்பதாக கூறியது. கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளையும் மாற்ற மறுத்துவிட்டது. பிரார்த்தனைக்கு கிறிஸ்தவர்கள் எந்த சிரமமும் இன்றி சென்று வர போதிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று, தேர்தலுக்கு எதிரான 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். எனவே, மதுரை மக்களவைத் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். #LSPolls #HighCourt

    Next Story
    ×