search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு
    X

    கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் - அமைச்சர் பங்கேற்பு

    • ரீடிங் மராத்தான் என்ற செயலி வழியாக 12 நாட்களில் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள், 263 கோடி சொற்களை வாசித்துள்ளனர்.
    • பள்ளி கல்வித்துறையின் செயல்பாட்டினால் இல்லம் தேடி கல்வி திட்டம் இந்திய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற நிலை வந்து விடகூடாது என்பதனை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் 13,332 ஆசிரியர்கள் நியமிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளோம். இந்த கல்வியாண்டில் மட்டும் 8000 முதல் 8500 ஆசிரியர்கள் நியமித்துள்ளோம். இன்னும் ஆசிரியர்கள் நியமிப்பதை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த கல்வியாண்டு முதல் மாணவர்களது தினசரி அட்டவணையில் நூலகத்திற்கு என 20 நிமிடம் ஒதுக்கி நூலக நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. "ரீடிங் மராத்தான்" என்ற செயலி வழியாக 12 நாட்களில் ஏறத்தாழ 18 லட்சம் மாணவர்கள், 263 கோடி சொற்களை வாசித்துள்ளனர். இந்த செயலியில் செயற்கை நுண்ணறிவு மூலம் வாசிப்பு முறையை ஒழுக்கப்படுத்துதலும் முறைப்படுத்தப்பட்டது.

    10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தினை அதிகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேர்ச்சி சதவீதத்தினை உயர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழுதடைந்த கட்டிடங்களில் எந்த குழந்தைகளும் அமர வைக்க கூடாது, கட்டடம் மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தனிகவனமும், பள்ளி திறந்த இந்த நேரத்தில் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டிய சீருடைகளும், புத்தகங்களும் சென்றடைந்து விட்டதா என்பதையும் உறுதி செய்யப்பட்டுவருகிறது.

    பள்ளி மேலாண்மை குழுவிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எண்ணும், எழுத்தும் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்த 2025ம் ஆண்டு என்பதனை இலக்காக கொண்டு நாம் செயல்பட நம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளி கல்வித்துறையின் செயல்பாட்டினால் இல்லம் தேடி கல்வி திட்டம் இந்திய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    முன்னதாக, போதை ஒழிப்பு தொடர்பான மாணவர்களுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் அமைச்சர் தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன், பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளி கல்வித்துறை, மாநில திட்ட இயக்குநர் சுதன், மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து, துரை.சந்திரசேகரன், பன்னீர் செல்வம், மாவட்ட ஊராட்சித்தலைவர்பாலசுப்ர–மணியன்மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், முதன்மை கல்வி அலுவலர் அ.தியாகராஜன் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×