என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு
- ஓட்டல் ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஓட்டலின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டல் ஊழியர்கள் தங்கி இருந்தனர்.
கோவை,
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் நாராயண பெருமாள்(வயது24). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
அந்த ஓட்டலின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் ஓட்டல் ஊழியர்கள் தங்கி இருந்தனர். அவருடன் அதே ஓட்டலில் வேலை செய்து வரும் சாத்தான்குளம் பன்னம்பாறையை சேர்ந்த அஜித்குமார்(25) மற்றும் குன்னத்தூரை சேர்ந்த ஷாலின்(24) ஆகியோரும் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில், நாராயண பெருமாளுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் அறையில் இருந்து வந்தார். மேலும் அவர் தன்னுடன் அறையில் தங்கியவர்களின் பொருட்களை திருடியதாக தெரிகிறது.இதனையறிந்த ஓட்டல் நிர்வாகம் நாராயணபெருமாளை வேலையை விட்டு நீக்கியது. அவரை நீக்கியதால் அவரது நண்பர் அஜித்குமாரும் வேலையை விட்டு நின்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்லாமல் அறையில் இருந்தனர்.
கடந்த 6-ந் தேதி தனது அறையில் இருந்த ஷாலினிடம் இருவரும் பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து மிரட்டி ஷாலினிடம் இருந்த 1 பவுன் தங்க செயின், மோதிரம் மற்றும் செல்போனை பறித்தனர். இருவருக்கும் பயந்து ஷாலின் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.
இதனை அறிந்த ஓட்டல் நிர்வாகத்தினர் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியர்கள் நாராயண பெருமாள் மற்றும் அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






