search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படுமா? - பயணிகள் வலியுறுத்தல்
    X

    தென்காசி ரெயில் நிலையம் முனையமாக மாற்றப்படுமா? - பயணிகள் வலியுறுத்தல்

    • தென்காசி வழியாக 10 தினசரி ரெயில்களும், ஒரு வாரம் மும்முறை ரெயிலும், 4 வாராந்திர ரெயில்களும் இயங்கி வருகின்றன.
    • தென்காசி ரெயில் நிலையத்தை மேம்படுத்தினால் வாராந்திர ரெயில்களை நிரந்தர தினசரி ரெயில்களாக இயக்க முடியும்.

    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மிக முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையம் தென்காசி ஆகும். தற்போது தென்காசி வழியாக 10 தினசரி ரெயில்களும், ஒரு வாரம் மும்முறை ரெயிலும், 4 வாராந்திர ரெயில்களும் இயங்கி வருகின்றன.

    டெர்மினல் ரெயில் நிலையங்களாக உள்ள செங்கோட்டை ரெயில் நிலையத்தில் 4 நடை மேடைகளும், நெல்லை ரெயில் நிலையத்தில் 5 நடை மேடைகளும் உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு போதுமானதாக இல்லை.

    எனவே 4 நடைமேடைகள் கொண்ட தென்காசி ரெயில் நிலையத்தில் நீரேற்றும் வசதி ஏற்படுத்தினால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

    இதுகுறித்து தென்மாவட்ட பயணிகள் கூறியதாவது:- செங்கோட்டை, நெல்லை ரெயில் நிலையங்களை போல தென்காசி ரெயில் நிலையத்தை டெர்மினல் நிலையமாக மாற்ற வேண்டும். இதற்கு தென்காசி ரெயில் நிலையத்தில் பைப் லைன் மற்றும் நீரேற்றும் தொட்டி வசதிகள் ஏற்படுத்தினால் தென்காசியில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்குவதற்கு வாய்ப்பாக அமையும்.

    தற்போது செங்கோட்டை ரெயில் நிலையத்திலிருந்து கூடுதல் ரெயில்கள் இயக்க முடியாது என்று தெற்கு ரெயில்வே கைவிரித்துள்ள நிலையில் தென்காசி ரெயில் நிலையத்தை மேம்படுத்தினால் வாராந்திர ரெயில்களை நிரந்தர தினசரி ரெயில்களாக இயக்க முடியும். இதற்காக தென்காசி எம்.பி. மேம்பாட்டு நிதி மற்றும் அம்ரித் பாரத் திட்டத்திற்காக செலவிடப்படும் நிதியிலிருந்தும் நீரேற்றும் வசதியை ஏற்படுத்தி டெர்மினல் ஆக மாற்ற வேண்டும். தென்காசியில் டெர்மினல் செயல்படத் தொடங்கினால் மதுரையோடு நிற்கும் சில ரெயில்களை தென்காசி வரைக்கும் நீட்டிக்க முடியும். அதைப்போல சிலம்பு எக்ஸ்பிரஸையும் ,தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை இயங்கும் ரெயிலையும் தினசரியாக இயக்கவும் வாய்ப்புகள் அமையும். எனவே தென்காசி தொகுதி எம்.பி. உடனடியாக தென்காசியை டெர்மினல் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×