search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வ.உ.சி. சிறுவர் பூங்கா கட்டணம் உயர்வு
    X

    வ.உ.சி. சிறுவர் பூங்கா கட்டணம் உயர்வு

    • தூய்மை பணியாளர் சம்பளம் உயர்த்தி வழங்கிட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    • கோவை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    கோவை,

    கோவை மாநகராட்சி கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேயரால் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் படி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வருகிற ஜனவரி 1 -ந் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அனைத்து 100 வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

    அதன் பின்னர் கூட்டத்தில் வ.உ.சி. சிறுவர் பூங்காவிற்கு கட்டணம் சிறுவர்களுக்கு ரூ. 5 எனவும், பெரியவர்களுக்கு ரூ.10 என உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வ.உ.சிதம்பரனாருக்கு முழு உருவச் சிலையினை வ.உ.சி. பூங்காவில் பொதுப்பணிதுறை மூலம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தின் கீழ் சேதமடைந்த தார் சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து மூன்றாம் நபர் ஆய்வு மேற்கொள்ள ரூ.35 லட்சத்து 51 ஆயிரத்து 800 ஆகும், இதற்கான அனுமதி கோருதல்,

    மாநகராட்சி பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு குடிநீர் இணைப்பு கட்டணமின்றி வழங்குதல், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள தெரு நாய் ஒன்றுக்கு ரூ.445 யில் இருந்து ரூ.700 என்ற வீதத்தில் முதல்கட்டமாக ஒரு மண்டலத்திற்கு 1000 தெரு நாய்கள் வீதம், 5 மண்டலங்களுக்கு 5000 தெருநாய்களை பிடிக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட 65 தீர்மானங்களுக்கு அனுமதி கோரப்பட்டது. இந்த தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

    கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் பேசுகையில், " மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதிகளில் பூமி பூஜை போடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் 75 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள பணிகள் நிறைவு பெறாமல் அரைகுறையாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்," என்றார்.

    மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணி நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் இப்பணியை மேற்கொள்கிறது. அன்மையில் பெண் நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது ஆனால் 6 மாதம் கழித்து அந்த நாய் மீண்டும் கர்ப்பம் ஆனது," என்றார். இதனால் மன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

    முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கூட்டரங்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கவுன்சிலர் பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில் கோவை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களுக்குள் யார் அதிகமாக சம்பாதிப்பது என்ற போட்டி நிலவுகிறது. மக்களை பற்றிய அக்கறை தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இல்லை. மேலும் மேயரை கண்டித்தும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

    Next Story
    ×