search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை 3 ஆண்டுகள் வழங்கப்படும்-கலெக்டர் தகவல்
    X

    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை 3 ஆண்டுகள் வழங்கப்படும்-கலெக்டர் தகவல்

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படுவதாக விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இதற்கான விண்ணப்பத்தினை WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருக்க கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருக்க கூடாது. தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை தொடங்கி இருக்க வேண்டும்.

    பொது பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தோல்வியுற்றோர் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.300, பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு ரூ.400, பட்டப்படிப்பு ரூ.600 என்ற அளவில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்பத்தினை பொது பதிவு தாரர்கள் நேரிலோ, இந்த அலுவலகத்தில் பெற்றோ அல்லது WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

    அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×