என் மலர்
உள்ளூர் செய்திகள்

உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுடன் மாணவ-மாணவிகள் செயல்பட வேண்டும்
- உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுடன் மாணவ-மாணவிகள் செயல்பட வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
- குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் சிவகாசி இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அசோகன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கலெக்டர் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வயது முதல் 19 வயது வரையுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு, மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது.
குடலில் இருக்கக்கூடிய புழுக்கள் நீங்கள் உண்ணக் கூடிய சத்தான உணவுகளை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்திக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக இருக்கக் கூடிய ஹீமோகுளோபின் குறையாமல் இருக்க வேண்டும் என்றால் விழிப்புணர்வு முக்கியம்.
குடற்புழு மாத்திரை உங்கள் நல வாழ்வுக்காக தரக்கூடிய ஒரு முக்கியமான பொருளாகும். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் நீங்கள் அனைவரும் உடல் நலம் குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், துணை சுகாதார இயக்குநர் யசோதா மணி, சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரன், வட்டாட்சியர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






