என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு நவீன தொப்பி மற்றும் குளிர்பானங்களை டி.ஐ.ஜி. வழங்கினார்.
    வேலூர்:

    வேலூரில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனை சமாளிக்க வேலூர் மாநகர பகுதிகளில் பணியாற்றக் கூடிய போக்குவரத்து போலீசார் 150 பேருக்கு தொப்பி மற்றும் தினந்தோறும் குளிர்பானங்கள் வழங்கப்படுகிறது.

    வேலூர் நேதாஜி மைதானத்தில் டி.ஐ.ஜி ஆனி விஜயா போக்குவரத்து போலீசாருக்கு தொப்பிகளை வழங்கினார். அவர் பேசியதாவது;

    போலீஸ் பிரிவில் போக்குவரத்து காவல் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து சேவை செய்து வருகிறார்கள். வெயில் காலத்தில் போக்குவரத்து போலீசார் தங்களது உடல் நலனை பாதுகாக்க வேண்டும். 

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாட்டின் பேரில் தற்போது அனைவருக்கும் வெயிலை சமாளிக்க கூடிய வகையில் நவீன தொப்பி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து தினமும் 2 வேளை மோர் பழச்சாறுகள் போன்றவை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ஏடி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    குடியாத்தம் பகுதியில் மழையால் சேதமடைந்த பாலங்கள் சீரமைக்க ரூ.6 கோடி ஒதுக்கி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார். 

    துணைத் தலைவர் கே.கே.வி. அருண்முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எஸ்.யுவராஜ், எஸ்.சாந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் குசலகுமாரி சேகர், உத்தரகுமாரி, ஒன்றிய பொறியாளர்கள் குகன், புவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குறைகள் குறித்து கூறினார்கள் ஒன்றிப்பு கூட்டத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்துகொள்ளும் வகையில் மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

    குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்திலேயே சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம் உள்ளிட்ட அலுவலங்கள் புதியதாக கட்ட அரசுக்கு கோரிக்கை விடுப்பது.

    குடியாத்தம் நகரில் உள்ள கால்நடை மருத்துவ மனையை கொண்ட சமுத்திரம் பகுதிக்கு மாற்ற வேண்டும்.

    கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட குடியாத்தம் ஒன்றிய பகுதியில் பாலங்களுக்கு தற்போது நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 6 பாலங்கள் அமைக்க ரூபாய் 6கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.

    சீவூர்-மூங்கப்பட்டு செல்லும் சாலை, அக்ராவரம் நடுகட்டை செல்லும் பகுதி, சூராளூர் பகுதி, மூங்கப்பட்டு- மீனூர்மலைமலை, பட்டு- ஆலாம்பட்டரை, உப்பரபள்ளி 6 இடங்களில் மேம்பாலம் கட்டப்படும்.

    நகரின் மையப்பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் இடிக்கப்பட்டு விரைவில் புதிதாக நவீன வசதிகள் உடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் அதே இடத்தில் கட்டப்பட்ட உள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டது.

    ராமாலை கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள்.
    வேலூர் சத்துவாச்சாரியில் சிமெண்டு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலக சாலையையொட்டி 5-வது பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றை அகற்றிவிட்டு கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது.

    தற்போது புதிதாக சாலை போடுவதற்காக அந்த தெருவில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே மரங்கள் இருந்த இடத்தில் அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

    இந்த சாலையில் சிமெண்டு சாலை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் இன்று காலை நடந்தது.இதனை அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே இங்கே இருந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டனர்.

    தற்போது நாங்கள் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். சிமெண்டு சாலை அமைத்தால் மரக்கன்று அனைத்தும் நாசமாகிவிடும். மேலும் புதிதாக மரங்களை நட்டு வளர்க்க முடியாது. எனவே இந்த தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதை கைவிட்டு தார்சாலை அமைக்க வேண்டும்.

    சத்துவாச்சாரி பகுதியில் பல தெருக்களில் சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சிமெண்டு சாலைகள் அமைத்து வருகின்றனர். இதனால் புதிதாக மரங்களை வளர்க்க முடியாது. 

    வெயில் வாட்டி வதைக்கும் வேலூரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மரங்களை வளர்க்கும் வகையில் சாலைகளை அமைத்து தர வேண்டும் என்றனர்.
    வாழ்வான்குன்றம் கோவிலில் சாமி சிலைகளை குருசாமி, சரண்ராஜ், ரமேஷ் ஆகியோர் கடந்த ஆண்டு திருடியுள்ளனர். சிலையை காப்புக்காடு பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வாழ்வாங்குன்றம் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பொற்பணை ஈஸ்வரர் கோவில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி இந்த கோவிலில் கதவை உடைத்து அங்கிருந்த பிரதோ‌ஷ நாயகர் மற்றும் சுவர்ணாம்பிகை அம்பாளின் உலோக சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ரங்கநாதன் ஏட்டுகள் தீர்த்தகிரி, ரவி தலைமையிலான போலீசார் வேலம்பட்டு கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    ஒரு பைக்கில் கோணிப்பையில் ஏதோ பொருட்களை மறைத்தபடி 3 வாலிபர்கள் வந்தனர். இதைப்பார்த்து சந்கேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் இருந்த கோணிப்பையை திறந்து பார்த்தபோது, அதில் வாழ்வாங்குன்றம் கோவிலில் காணாமல் போன 2 சாமி சிலைகள் இருந்தது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியை சேர்ந்த குருசாமி (வயது 30) என்பதும், இவர் மீது ஏற்கனவே கோவில் மற்றும் கடைகளில் திருடியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிலையை மீட்ட லத்தேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, குருசாமியை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும் தப்பி ஓடிய பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியை சேர்ந்த சரண் ராஜ் என்கின்ற ஒயிட் ரோஷ், உடைய ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    குருசாமி, சரண்ராஜ், ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வாழ்வான்குன்றம் கோவிலில் சாமி சிலைகளை கடந்த ஆண்டு திருடியுள்ளனர். அந்த சாமி சிலையை வாழ்வாங்குன்றம் காப்புக்காடு பகுதியில் அடர்ந்த புதர் பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தனர்.

    இவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த சிலை கடத்தல் புரோக்கர் ஒருவருடன் தொடர்பு உள்ளது. நேற்றுமுன்தினம் சென்னையை சேர்ந்த புரோக்கர் இவர்களை தொடர்புகொண்டு சாமி சிலை வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் இவர்கள் வாழ்வாங்குன்றம் காப்பு காட்டில் புதைத்து வைத்திருந்த சாமி சிலையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு கொண்டு சென்றனர். வழியில் போலீசார் சோதனையில் சிக்கியுள்ளனர்.

    தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் சென்னையை சேர்ந்த கும்பல் குறித்து தகவல் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    குடியாத்தம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை விபரீதம் ஏற்படும் முன்அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகே 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. 

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்ததால் இதனை அகற்ற கோரி அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறுகின்றனர். 

    மேலும் பலமாக காற்று அடிக்கும் போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசைவ தாகவும் கூறப்படுகிறது. 

    இதன் அருகே அங்கன்வாடி மையம் இருப்பதால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

    கடந்த சில ஆண்டுகளாக அந்த மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது இல்லை. இது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

    இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கீழே சரியும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொது மக்கள் அச்சப்படுகின்றனர். 

    அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    காட்பாடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள் (வயது 60) நேற்று அந்த பகுதியில் உள்ள கம்பெனியில் மாவு அரைத்துவிட்டு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.

    திடீரென அவர்கள் பாப்பாத்தி அம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். ஆனால் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    காட்பாடியில் பள்ளி மாணவர்கள் நலனுக்காக நாளை முதல் செயல்பட இருந்த போக்குவரத்து மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ஒடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்துள்ளது.அதனை சீர் செய்ய ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை உத்தேசித்துள்ளது. நாளை முதல் மேம்பால பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நாளை முதல் ரெயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும் வேலூர் சித்தூர் இடையே சில வாகனங்கள் திருமணம் சேர்க்காடு செல்ல வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் கோரிக்கையை ஏற்று ரெயில்வே மேம்பால பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாளை முதல் மூடப்படும் என்று அறிவித்திருந்த ரெயில்வே பாலம் தற்காலிகமாக திறக்கப்படுகிறது. கனரக வாகனங்கள் பாலத்தின் வழியாக செல்வதை தடைசெய்யப்படுகிறது. மேலும், மற்ற வாகனங்கள் அந்த பாலத்தின் வழியே கவனமாக செல்ல வேண்டும்.

    மேலும் பாலம் பழுதானால் உடனடியாக அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

    காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் தற்போது தேர்வு நேரம் நெருங்குவதால் மேம்பால பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் தற்காலிகமாக மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து பள்ளி கல்லூரி விடுமுறை நாட்களில் மேம்பால பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    வழிப்பாதை சம்பந்தமாக பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் சாய்நாதபுரம் தனியார் கல்லூரி அருகே வழிப் பாதை ஒன்று உள்ளது. இந்த வழியை சாஸ்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

    இந்த நிலையில் அந்த பாதையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தனியார் கல்லூரி அருகே உள்ள இடத்தில் அரிச்சந்திரன் சாமி சிலை ஒன்றை பொதுமக்கள் வைத்தனர்.

    இந்தபாதை சுடுகாட்டுக்கு செல்லும் வழி என்பதால் அந்த இடத்தில் அரிச்சந்திரன் சிலை வைத்து வழிபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் வைத்திருந்த அரிச்சந்திரன் சாமி சிலையை அப்புறப்படுத்த சென்றனர். அ.தி.மு.க. பிரமுகர் பி.எஸ்.பழனி உள்ளிட்ட பொதுமக்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

    தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் அரிச்சந்திரன் சிலையை அங்கிருந்து அகற்றினர்.

    பொதுமக்கள் பயன்படுத்த கூடிய சுடுகாட்டு பாதை அந்த பகுதியில் உள்ளது. ஆனால் அவர்கள் சாமி சிலை வைத்திருந்த இடம் பட்டா நிலம்.எனவே சாமி சிலை அங்கிருந்து அகற்றப்பட்ட தாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். பொதுமக்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    மணல் கடத்தல்காரருடன் போலீசார் உரையாடல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை இயங்கி வருகிறது. இவர்கள், மாவட்டம் முழுவதும் சென்று குற்றச்சம்பவங்கள், சட்ட விரோத செயல்கள் தொடர்பாக சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 

    மாவட்டத்தின் மிகவும் அதிகாரம் மிக்க அமைப்பாக செயல்படும் இந்த குழுவின் மீது சமீப காலமாக தொடர் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது.

    தனிப்படையில் செயல்படும் சிலர் சட்ட விரோத செயல்களில் நேரடியாக ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது.

    இதற்கிடையில், வேலூரில் மணல் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவரை மணல் கடத்தலில் ஈடுபட கூறியதுடன், அவர் கடத்திச் சென்ற கடத்தல் மணல் வாகனம் பாகாயம் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கூறியதின் பேரில் கடத்தப்பட்ட மணல் வண்டியை விடுவிக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பான செல்போன் உரையாடல் தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று விசாரணை நடத்தினார். மணல் கடத்தல் நபருடன் தனிப்படை போலீஸ்காரர் நடத்திய ஆடியோ குற்றச்சாட்டுகள் குறித்து ஏ.டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.
    குடியாத்தம் அருகே வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார்.
    குடியாத்தம்:

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் தகராறில் ஈடுபடுவது, மது போதையில் பள்ளிக்கு வருவது, ஆசிரியர்களிடம் தகராறு செய்வது, பள்ளி வகுப்பறையில் பொருட்களை சேதப்படுத்துவது என தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது.

    மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒடுகத்தூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவன் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த விரிவுரையாளர்களை செல்போனில் படம் எடுத்து அதை சக மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார்.

    இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு இருப்பதாக கூறப்படுகிறது. மாணவன் செல்போன் பயன்படுத்திய தகவல் கல்லூரி விரிவுரையாளர் களுக்கு தெரியவந்தது.

    இந்நிலையில் நேற்றும் அந்த மாணவன் கல்லூரி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கல்லூரி விரிவுரையாளர்கள் அந்த மாணவனிடம் இருந்து செல்போனை கைப்பற்றி உங்களுடைய பெற்றோர்களை அழைத்து வந்து மறுநாள் செல்போனை பெற்றுக் கொள்ளுமாறு கூறி உள்ளனர்.

    அதன் பின் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று உள்ளது. மாலையில் வகுப்பு முடிந்த பின் மாணவன் செல்போனை கேட்டுள்ளார் அதற்கு விரிவுரையாளர்கள் உங்களது பெற்றோரிடம் தருகிறோம் என கூறியுள்ளார். 

    மாலையில் வகுப்பு முடிந்த பின் கல்லூரி மாடியில் இருந்து அந்த மாணவன் திடீரென கீழே குதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்களும் கல்லூரி விரிவுரையாளர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் உடனடியாக அந்த மாணவனை மீட்டு குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

    மேல்சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் அந்த மாணவனுக்கு 2 கைகளிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் மருத்துவமனைக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதேபோல் பாலிடெக்னிக் கல்லூரிக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சட்டபேரவை மனுக்கள் குழுவிற்கு பொதுபிரச்சினைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2021-22-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு வேலூர் மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதனையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பட்ட நபரோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்சினைகள் குறித்து மனுக்களை மனுதாரர் தேதியுடன் கையொப்பமிட்ட மனுக்களை சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பலாம்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும், பல ஆண்டுகளாக அரசு அலுவலகம் தீர்க்கப்படாமல் இருக்கும் போது பிரச்சினைகள் குறித்தாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    தனிநபர் குறை, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள், வங்கி கடன் அல்லது தொழில் கடன் அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் உள்ளடக்கியதாக இருத்தல் கூடாது.

    மனுக்கள் குழு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும், ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதும். ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    மனுதாரர் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டு அறியப்படும். 

    இதுகுறித்து மனுதாரர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். வருகிற 20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    குடியாத்தத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் திருடிவிட்டு மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் நடுப்பேட்டை ஆதிமூலம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜாபர், இவர் காந்தி ரோடு பகுதியில் சோபா கடை வைத்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி கொண்டு சென்றுவிட்டார்.
    இன்று காலையில் கடையைத் திறக்க வந்த ஜாபர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மிளகாய் தூள் தூவி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

    கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ஜாபர் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடைபெற்ற கடையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் திருட்டு போன சம்பவத்தால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மோப்ப நாயுடன் இருந்து தப்பிக்க மிளகாய் தூள் தூவி சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×