என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரியில் சிமெண்டு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
    X
    சத்துவாச்சாரியில் சிமெண்டு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    வேலூர் சத்துவாச்சாரியில் சிமெண்டு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    வேலூர் சத்துவாச்சாரியில் சிமெண்டு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலக சாலையையொட்டி 5-வது பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றை அகற்றிவிட்டு கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றது.

    தற்போது புதிதாக சாலை போடுவதற்காக அந்த தெருவில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே மரங்கள் இருந்த இடத்தில் அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

    இந்த சாலையில் சிமெண்டு சாலை அமைக்க பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் இன்று காலை நடந்தது.இதனை அந்த தெருவில் உள்ள பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே இங்கே இருந்த மரங்களை வெட்டி அகற்றி விட்டனர்.

    தற்போது நாங்கள் புதிதாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறோம். சிமெண்டு சாலை அமைத்தால் மரக்கன்று அனைத்தும் நாசமாகிவிடும். மேலும் புதிதாக மரங்களை நட்டு வளர்க்க முடியாது. எனவே இந்த தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதை கைவிட்டு தார்சாலை அமைக்க வேண்டும்.

    சத்துவாச்சாரி பகுதியில் பல தெருக்களில் சாலைகளில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு சிமெண்டு சாலைகள் அமைத்து வருகின்றனர். இதனால் புதிதாக மரங்களை வளர்க்க முடியாது. 

    வெயில் வாட்டி வதைக்கும் வேலூரில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மரங்களை வளர்க்கும் வகையில் சாலைகளை அமைத்து தர வேண்டும் என்றனர்.
    Next Story
    ×