என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கோவிலில் திருடிய சாமி சிலைகளை சென்னை கும்பலிடம் விற்க முயற்சி

    வாழ்வான்குன்றம் கோவிலில் சாமி சிலைகளை குருசாமி, சரண்ராஜ், ரமேஷ் ஆகியோர் கடந்த ஆண்டு திருடியுள்ளனர். சிலையை காப்புக்காடு பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த வாழ்வாங்குன்றம் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பொற்பணை ஈஸ்வரர் கோவில் உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி இந்த கோவிலில் கதவை உடைத்து அங்கிருந்த பிரதோ‌ஷ நாயகர் மற்றும் சுவர்ணாம்பிகை அம்பாளின் உலோக சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ரங்கநாதன் ஏட்டுகள் தீர்த்தகிரி, ரவி தலைமையிலான போலீசார் வேலம்பட்டு கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    ஒரு பைக்கில் கோணிப்பையில் ஏதோ பொருட்களை மறைத்தபடி 3 வாலிபர்கள் வந்தனர். இதைப்பார்த்து சந்கேகமடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் இருந்த கோணிப்பையை திறந்து பார்த்தபோது, அதில் வாழ்வாங்குன்றம் கோவிலில் காணாமல் போன 2 சாமி சிலைகள் இருந்தது.

    இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரியை சேர்ந்த குருசாமி (வயது 30) என்பதும், இவர் மீது ஏற்கனவே கோவில் மற்றும் கடைகளில் திருடியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிலையை மீட்ட லத்தேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, குருசாமியை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும் தப்பி ஓடிய பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியை சேர்ந்த சரண் ராஜ் என்கின்ற ஒயிட் ரோஷ், உடைய ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    குருசாமி, சரண்ராஜ், ரமேஷ் ஆகியோர் சேர்ந்து வாழ்வான்குன்றம் கோவிலில் சாமி சிலைகளை கடந்த ஆண்டு திருடியுள்ளனர். அந்த சாமி சிலையை வாழ்வாங்குன்றம் காப்புக்காடு பகுதியில் அடர்ந்த புதர் பகுதியில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தனர்.

    இவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த சிலை கடத்தல் புரோக்கர் ஒருவருடன் தொடர்பு உள்ளது. நேற்றுமுன்தினம் சென்னையை சேர்ந்த புரோக்கர் இவர்களை தொடர்புகொண்டு சாமி சிலை வேண்டும் என கேட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் இவர்கள் வாழ்வாங்குன்றம் காப்பு காட்டில் புதைத்து வைத்திருந்த சாமி சிலையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு கொண்டு சென்றனர். வழியில் போலீசார் சோதனையில் சிக்கியுள்ளனர்.

    தப்பி ஓடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் சென்னையை சேர்ந்த கும்பல் குறித்து தகவல் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×