என் மலர்
திருவண்ணாமலை
செய்யாறு அருகே ஐ.டி.ஐ. மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள தென்னம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்யாறில் ஐடிஐ படித்து வருகிறார்.
கடந்த 24-ம் தேதி ஐ.டி.ஐ.க்கு சென்று விட்டு செய்யாறில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு மாணவர் வந்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர்கள் 2 பேர் முன்பகை காரணமாக மாணவரை பஸ்சிலிருந்து இறக்கி அவரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவருடன் வந்த அவரது நண்பர்கள் தடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து வாலிபர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் மின்மோட்டார் பைப்புகள் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலத்தில் பீ.வி.சி.பைப் அமைத்தல் மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாய நிலத்தில் நீர்பாசன வசதிக்காக பிவிசி பைப் அமைக்க திட்டத் தொகையில் 50 சதவிகிதம் மானியம் அதிகபட்சம் ரூ.15,000 மற்றும் விவசாய பம்பு செட்டிற்கு புதிய மின் மோட்டார் வாங்க திட்டத்தொகையில் 50 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.10,000மானியமாக வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் தாட்கோ இணையதள வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து. பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் சாதி சான்று, குடும்ப ஆண்டு வருவாய் சான்று, ஆதார் அடையாள அட்டை, பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற விலைப்புள்ளி, நிலத்திற்கான ஆவணங்கள் போட்டோ ஆகிய விவரங்களுடன்.
அதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவராக இருப்பின் www.application.tahdco.com என்ற இணையதள முகவரியிலும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருப்பின் www.fast.tahdco.com என்ற இணையதன முகவரியிலும் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்கள் பெற மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, (முதல் தளம்) மாவட்ட கலெக்டர்அலுவலகம், வேங்கிக்கால், திருவண்ணாமலை எண். 04175&232366) என்ற முகவரியில் தொடர்புகொண்டு விவரங்கள் பெற்று பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர்.பா.முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து உக்ரைனில் சிக்கியவர்களை மீட்டெடுக்கும் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா ராணுவம் கடந்த 24-ந்தேதி அதிகாலை உக்ரைன் நாட்டுக்குள் ராணுவ நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 5000 மாணவர்கள் பெரும்பாலும் தொழில்முறை கல்வி படிப்போர் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வாயிலாக பல மீட்பு அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இதனை ஒருங்கிணைக்கும் பொருட்டு அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது).கணேஷ் மற்றும் புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைமை உள்ளுறை ஆணையர் ஆகியோர் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்கு அருகில் உள்ள அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் விபரத்தை தெரிவிக்குமாறு திருவண்ணாமலை கலெக்டர்.பா.முருகேஷ் கேட்டு கொண்டுள்ளார்.
தொடர்பு அலுவலர்களின் எண்கள்
சே.கணேஷ்,
94450 08158,
அலுவலர், மாவட்ட கலெக்டர் நேர்முகஉதவியாளர் (பொது), திருவண்ணாமலை
மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசிஎண் 1070, ஜெரிந்தா லாசரஸ், ஆணையர், ஆயகைத் தமிழர் நாவன் மற்றும் மறுவாழ்வு
94458 69848
96000 23645
99402 56444
044-28515288
வாட்ஸ்அப் எண்
உக்ரைன் அவசர உதவி மையம் தமிழ்நாட்டு பொறிகை இல்லம் 92895 16716
புதுதில்லி; மின்னஞ்சல்ukrainetamils@gmail.com
திருவண்ணாமலை அறிவியல் பூங்கா சாத்தனூர் அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுளள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தில் பெரிய அணைகளில் முக்கியமானதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும், இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன.
இங்குள்ள முதலைப்பண்ணையில் 100-க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
பூங்கா பகுதியில் அழகிய நீச்சல் குளம் ஒன்று உள்ளது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சாத்தனூர் அணை பூங்காவில் பொழுதைக் கழிப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.
கொரனோ பரவல் காரணமாக பல மாதங்களாக சாத்தனூர் அணையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள் அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
அதன்படி சாத்தனூர் அணை பூங்காவில் பல மாதங்களுக்குப் பிறகு நாளை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் பூங்கா பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேபோல் மிருகண்டா அணை, குப்பநத்தம் அணை பகுதியிலும் நாளை முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அறிவியல் பூங்கா பல மாதங்களாக மூடிக்கிடக்கிறது. பொதுமக்கள் செல்லாததால் பூங்கா முழுவதும் குப்பையாக காட்சி அளிக்கின்றன.
திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் இந்த பூங்காவில் நடை பயிற்சி செய்வார்கள்.நாளை முதல் அறிவியல் பூங்காவில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு முன்பாக பூங்காவை சுத்தம் செய்து தடுப்பு மருந்து தெளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்யாறு அருகே தச்சுத் தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
செய்யாறு:
செய்யாறு அருகே மோரணம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 69). இவர் மர தச்சு வேலை செய்து வந்தார்.
இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். விஸ்வநாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது சுடுகாடு அருகே வரும் போது திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார். இதுகுறித்து முதல் மனைவி இந்து மதியிடம் அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்துமதி மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பங்கேற்ற பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கிராமப்புற பள்ளியை நகரப்புற பள்ளிகளுடன் இணைக்கும் விதமாக எரும்பூண்டி அரசினர் உயர்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை, மங்கலம்புதூர் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் எரும்பூண்டி பள்ளியில் கல்வி வளர்ச்சி குறித்தும் அப்பகுதி நிகழ்வுகள் குறித்தும் மங்கலம்புதூர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இதேபோன்று மங்கலம்புதூர் பட்டதாரி ஆசிரியர்கள், எரும்பூண்டி பள்ளிக்கு சென்று பள்ளி வளர்ச்சி மற்றும் நிகழ்வுகள், சிறப்புகள் குறித்து கலந்துரையாடல் செய்யும் வகையில் இந்த பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி பயிற்றுநர் ராமஜெயம் மற்றும் பென்னி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் ரூ.2.10 கோடியில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வேங்கிக்கால், ஆடையூர், அடி அண்ணாமலை, மேலத்திகான் மற்றும் சோ.நாச்சிப்பட்டு ஆகிய கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவருகிறது.
ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் எம்.பிரதாப் பார்வையிட்டு திட்ட ஆய்வினை மேற்கொண்டார்.
ஆய்வின்போது ஆணையாளர் கே.சி. அமிர்தராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.எஸ்.லட்சுமி, உதவி பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் பிரதாப், துறை அலுவலர்களுக்கும், ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்படி அறிவுறுத்தினார்.
ஆய்வின் முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து ஊராட்சி செயலாளர் களுக்கும், அனைத்து கள அலுவலர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தி பொது மக்களுக்கான வீடுகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களில் விரைந்து செயல்பட்டு பணிகளை முடிக்கவும், உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அறிவுரைகள் வழங்கினார்.
தண்டராம்பட்டு அருகே கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச் சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததால் வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் நேற்று மாலை விவசாய கூலி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அங்குள்ள விவசாய நிலம் வழியாக அவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்தார்.
அங்குள்ள கரும்பு தோட்டத்தின் அருகே வந்தபோது வாலிபர் திடீரென இளம்பெண்ணை வாயில் துணியால் அமுக்கி கரும்பு தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றார். அங்கு வைத்து பெண்ணின் வாயில் துணியை வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அவரது பிடியில் இருந்து தப்பிய இளம்பெண் வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு கத்தி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் கரும்பு தோட்டத்திற்கு ஓடிவந்தனர். வாலிபரின் பிடியிலிருந்து பெண்ணை மீட்டனர். மேலும் வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பலாத்கார முயற்சியில் காயமடைந்த இளம்பெண் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். திருவண்ணாமலை டி.எஸ்.பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுதொடர்பாக வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.
செய்யாறு அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள புரிசை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 80). உடல் ஊனமுற்றவர்.
கடந்த 7 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பயிருக்கு அடிக்கப் பயன்படும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சித்தன்ன கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி (வயது 60) விவசாயி.
இவருக்கு கவிதா என்ற மகளும், சிலம்பரசன் மற்றும் மணிகண்டன் (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கவிதாவுக்கும், சிலம்பரசனுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
மணிகண்டனுக்கு திருமணம் ஆகாததால் தனது தந்தையிடம் திருமணம் செய்து வைக்கக்கோரி கேட்டார். பூபதி 6 மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.
இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட மணிகண்டன் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம் அருகே 2000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வேட்டவலம்:
வேட்டவலம் மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் வேட்டவலம் எஸ்.ஐ ராமச்சந்திரன், தலைமையில் எஸ்.ஐ ராமகிருஷ்ணன், தலைமை காவலர் பார்த்திபன், தனிப்பிரிவு போலீசார் நேற்று அணுகுமுறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொன்னமேடு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள மலைப்பகுதியில் 8 பிளாஸ்டிக் பேரல்கள் மற்றும் பிளாஸ்டிக் குடம் கேன் ஆகியவற்றை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.
பின்னர் 2000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் 31 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது.
திருவண்ணாமலை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளுக்கும் கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
25 -வது வார்டில் கள்ள ஓட்டு புகார் எழுந்ததால் நேற்று முன்தினம் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் ஓட்டுகள் 2.30 மணி நேரம்வரை எண்ண பட்டதால் மற்ற வாக்குகளை எண்ணுவதற்கு தாமதமானது.
அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தி.மு.க. 31 வார்டுகளில் வெற்றி பெற்றது. 6 வார்டுகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் பழனி, சந்திரபிரகாஷ் ஆகியோர் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக அதிக வாக்குகள் பெற்றனர். 2வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
மறுவாக்குபதிவு நடைபெற்ற 25-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் சுயேச்சை வேட்பாளர் ஸ்ரீதேவி பழனி 648 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க.வேட்பாளர் 511 வாக்குகள் பெற்றிருந்தார்.பா.ஜ.கவேட்பாளர் 24 ஓட்டுகளும், அ.தி.மு.க.வேட்பாளர் 8 ஓட்டுக்களும் பெற்று டெபாசிட் இழந்தனர்.
மறுவாக்குப்பதிவு அறிவித்த போதிலும் மனம் கலங்காமல் போராடி தென்னைமரம் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி பழனியை வார்டு மக்கள் பாராட்டினர்.
மேலும் 35-வது வார்டில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பாப்பாத்தி கைப்பை சின்னத்தில் போட்டியிட்டு அ.தி.மு.க.வேட்பாளர் ஜரினாபாவை விட 14 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஜரினாபா 1,075 வாக்குகளும், பாப்பாத்தி 1,089 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் போட்டியிட்ட 6 சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. மேலும் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க.உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 201பேர் டெபாசிட் இழந்தனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் 31 வார்டுகளில் வெற்றி பெற்றதால் தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இதில் 39-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் நிர்மலா வேல்மாறன் 2,375 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் 8-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ராஜாத்தி விஜியராஜ் 2,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.






